தி.மு.க. நகர செயலர் மிரட்டுகிறார் :நகராட்சி தலைவர் ஆதங்கம்..!

குமாரபாளையம் நகரமன்ற கூட்டம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது.

Update: 2023-09-29 14:30 GMT

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற கூட்டம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. 

தி.மு.க. நகர செயலர் என்னை நகராட்சி அலுவலகத்தில் மிரட்டுகிறார் என்று நகராட்சி தலைவர் தனது ஆதங்கத்தை  வெளியிட்டார்.

குமாரபாளையம் நகரமன்ற கூட்டம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. அந்த கூட்டத்தில் இதில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு:

வெங்கடேசன் (துணை தலைவர்):

நகராட்சி கழிப்பிட மின்கட்டணம் நகராட்சி நிர்வாகமே செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றவர்கள் கட்டணம் செலுத்தாமல் விட்டு விடுவதால் இடையூறு ஏற்படுகிறது. நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள இ .சேவை மையத்தை விரிவு படுத்த வேண்டும். ஒப்பந்ததாரர் எத்தனை டன் குப்பை அகற்ற வேண்டும்? அவர்கள் சரிவர குப்பை எடுப்பது இல்லை. குப்பை, சாக்கடை சுத்தம் செய்தல், இதுதான் மக்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். அம்மன் நகர் சாலை வடிகால் பணி அமைத்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும்.

பழனிசாமி (அ.தி.மு.க.):

ஜி.ஹெச்.ல் பொதுமக்கள் டூவீலர் செட் அமைக்க வேண்டும். குமாரபாளையமா? கொமாரபாளையமா? தீர்வு காணப்பட வேண்டும்.

பாலசுப்ரமணி (அ.தி.மு.க.) :

புதிய ஆணையர் கையில் செய்யவேண்டிய பணிகள் குறித்து விண்ணப்பம் கொடுத்தேன். அது தீர்மானத்தில் வைக்கப்படவில்லை.

வேல்முருகன் (சுயேச்சை)

எனது வார்டுக்கு தூய்மை பணியாளர் நான்கு பேர் ஒதுக்கித்  தாருங்கள். குப்பை பிரித்து எடுக்கும் மையம் அருகே வசிக்கும் நான்கு பெண் பிள்ளைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்றனர்.

(கோவிந்தராஜ், ராஜ், பரிமளம், சுமதி, புருஷோத்தமன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் குப்பை அகற்றாமல் இருப்பது, ஒப்பந்த பணியாளர்கள் மெத்தனம், குப்பை எடுக்க சொன்னால் அலட்சியம் செய்வது என்பது குறித்தும், வடிகால், சாலை, வசதி கேட்டும் பேசினார்கள். )

ஆணையர் சரவணன்:

குறிப்பிட்ட எடை அளவுள்ள குப்பையை அகற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படுகிறது. அரசு அனுமதி பெற்றுத் தான் ஒப்பந்தம் ரத்து செய்ய முடியும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு  சம்பளம் முழுதாக தருவதில்லை.

கதிரவன் (தி.மு.க.):

ஒப்பந்த பணியாளர்கள் தள்ளுவண்டியில் குப்பைகள் சேகரித்து எடை போட்டு காண்பித்து ஓரிடத்தில் நிறுத்தி விடுகிறார்கள். அந்த குப்பையை எங்கும் கொட்டாமல், மீண்டும் மறுநாள் அதே குப்பையை எடை போட வைக்கிறார்கள். இது போன்ற மோசடி பல வார்டுகளில் நடக்கிறது என தெரியவருகிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விஜய்கண்ணன் (நகராட்சி தலைவர்):

ஒப்பந்த தொழிலாளர்கள் பல முறைகேடான செயல்களில் ஈடுபடுவதாக நீங்களே சொல்கிறீர்கள். அவர்களின் ஒப்பந்தம் ரத்து செய்ய நகராட்சி நிர்வாகத்திற்கு உரிமை உண்டு. நகராட்சி பகுதிகள் தூய்மையாக இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினால் கொண்டுவரப்பட்ட திட்டம் இது.

நீங்கள் ஒத்துழைத்தால் இந்த டெண்டர் ரத்து செய்யலாம். இவர்களுக்கு சம்பளமாக நான்கு கோடி ரூபாய் செலவாகிறது. சரிவர வேலை செய்வது இல்லை. இதுவரை பழைய பணியாளர்கள் தான் நகராட்சி பகுதியை சுத்தமாக வைத்திருந்தனர். இவர்கள் ஒப்பந்தம் ரத்து செய்தால், நான்கு கோடி ரூபாய்க்கு நகராட்சிக்கு தேவையான் பல பணிகள் செய்யலாம். அவர்களுக்கு ஆதரவாக தி.மு.க.வினர் செயல்பட்டு வருகின்றனர். அதனால் அவர்கள் சரியாக வேலை செய்வது இல்லை.

ஏன்? என்று கேட்டால், நாங்கள் மேலிடத்தில் உங்கள் பற்றி புகார் சொல்ல வேண்டி வரும் என்று என்னிடம் கூறுகிறார்கள். உச்சகட்டமாக தி.மு.க.நகர செயலர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள எனது அறைக்கு வந்து, என்னை மீறி நடவடிக்கை எடுத்து பார் என்று, என் டேபிள் மீது அடித்து சவால் விடுகிறார். நான் யாரின் மிரட்டலுக்கும் பயப்பட மாட்டேன்.

வேலை சரியில்லை என்றால் டெண்டர் ரத்து செய்வேன். என்னை நகர செயலர் பணி செய்யவிடாமல் தடுத்து வருகிறார். நகராட்சி நிர்வாகம் நானோ, ஆணையரோ, பொறியாளரோ செயல்படுத்த முடிவதில்லை. நகர செயலர்தான் அனைத்து பணிகளை எங்களை மீறி செயல்படுத்தி வருவதுடன், மிரட்டலும் விடுத்து வருகிறார்.

இது போன்ற கொடுமை அ.தி.மு.க. ஆட்சியில் கூட நடந்தது இல்லை. நான் சேர்ந்த தி.மு.க. ஆட்சியில் தான் அத்துமீறல் நடந்து வருகிறது. கடும் மன உளைச்சல் ஏற்படுகிறது. பேசாமல் ராஜினாமா செய்து விட்டு போகலாம் என்று கூட எண்ணத் தோன்றுகிறது. யார் மிரட்டலுக்கும் பயந்து ஒப்பந்தாரர் பில் போட மாட்டேன். மக்கள் பணம் விரயம் ஆக விட மாட்டேன்.

அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பழனிசாமி, பாலசுப்ரமணி, புருசோத்தமன், தி.மு.க. துணை தலைவர் வெங்கடேசன் ஆகியோர் கூறியதாவது:

நகராட்சி அலுவலகம் வந்து மிரட்டுவது யாராக இருந்தாலும் நீங்கள் பயப்படாதீர்கள். நாங்கள் அனைத்து கவுன்சிலர்களும் உறுதுணையாக உள்ளோம். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும், குப்பை அகற்றும் ஒப்பந்ததாரர் ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுங்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

விஜய்கண்ணன் ( நகராட்சி தலைவர்) (தி.மு.க.):

எனக்கு இப்போது தி.மு.க.வை விட அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தான் உறுதுணையாக உள்ளனர்.

இவ்வாறு விவாதங்கள் நடந்தது.

இந்த குற்றச்சாட்டு குறித்து குமாரபாளையம் தி.மு.க. வடக்கு நகர செயலர் செல்வம் கூறியதாவது:

குமாரபாளையம் நகரமன்ற கூட்டத்தில் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பேசுகையில், குமாரபாளையம் நகர தி.மு.க. செயலர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள எனது அறையில் வந்து, உன்னால் என்ன செய்து விட முடியும்? நான் நினைத்தது தான் நடக்கும். முடிந்தால் தடுத்து பார், என்று மேஜையை தட்டி மிரட்டினார், என்று நேற்று நடந்த நகரமன்ற கூட்டத்தில் கூறினார். இது குறித்து நகர தி.மு.க. வடக்கு செயலர் செல்வம் கூறியதாவது:

நான் நகராட்சி அலுவலகம் பக்கமே போகவில்லை. அப்படி பேசவும் இல்லை. நகரமன்ற தலைவர் தன் சுய விளம்பரத்திற்காக இப்படி சொல்லியுள்ளார். அப்படி நான்  வந்து மிரட்டியது உண்மை என்றால், வீடியோ ஆதாரம் காட்டச்  சொல்லுங்கள். நான் அப்படி பேச வேண்டிய அவசியமும் இல்லை. என் மீது அவதூறு பரப்பும் நோக்கத்தில் இப்படி பேசி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News