குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் தொகுதி அலுவலகம் திறப்பு
குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் தொகுதி அலுவலகத்தை அமைச்சர்கள் வேலு, மதிவேந்தன் திறந்து வைத்தனர்.;
குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் நடந்த தொகுதி அலுவலக திறப்பு விழாவில் அமைச்சர் வேலு பேசினார்.
குமாரபாளையத்தில் தி.மு.க சார்பில் அமைக்கப்பட்ட தொகுதி அலுவலகம் திறப்பு விழா நகர செயலாளர்கள் செல்வம், ஞானசேகரன் தலைமையில் நடந்தது. மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், திருச்செங்கோடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவருமான மதுரா செந்தில் விழாவை துவக்கி வைத்தார்.
கட்சி தொகுதி அலுவலகத்தை, மாநில நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆகியோர் திறந்து வைத்தனர். இதே வளாகத்தில் நிறுவப்பட்ட பேனா சின்னத்தையும் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்வில் அமைச்சர் வேலு பேசியதாவது:-
குமாரபாளையம் தொகுதி தங்கமணியிடம் மணி அதிகம் காணப்பட்டதால் வெற்றி பெற்று விட்டார். எனவே, தி.மு.க வரும் தேர்தல்களில், அதிக அளவில் மக்கள் பணியாற்றி இந்த தொகுதியை தி.மு.க கைப்பற்றும். நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல், வெற்றி என்பதே இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுகிறோம்.
கலைஞரின் பேனா புரட்சிகள் செய்தது. இதனால் தமிழ் திரை உலகம் புகழ் பெற்றது. சமஸ்கிருத வசனம் நீக்கி தமிழ் மூலம் பேனாவால் சாதித்து காட்டியவர் கலைஞர். இந்த வரலாறு படைத்த பேனாவை நிறுவி உள்ளது பெருமை ஆகும். இங்கு நெசவு தொழில் புரிவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இலவச மின்சாரம், நெசவாளர்களுக்கு ஆயிரம் யூனிட் தந்தது கலைஞர் அரசு ஆகும். தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் காமராசர், அண்ணா, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். என பல முதல்வர் இருந்தனர். தமிழ்நாடு என பெயர் சூட்டியவர் அண்ணா.
தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி தொடர்ந்தால்தான் சீரடையும். கொரோனா பாதிப்பு நேரத்தில் இல்லம் தேடி 4 ஆயிரம் ரூபாய் வழங்கியது தி.மு.க அரசு. மும்மூர்த்திகளான பெரியார், அண்ணா, கலைஞர் பெண் கல்வியை வலியுறுத்தினார்கள்.
பொதுவாக உயர்நிலைப்பள்ளி கல்விக்கு அடுத்து பெண் கல்வி பிளஸ்டூ, பட்டதாரிகள் சதவீதம் குறைந்து போய் விடுகிறது. எனவே, பெண் கல்வியில் இடை நிற்றலைக் குறைக்க புதுமைப் பெண் திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய், உள்ளிட்ட திட்டங்களை ஸ்டாலின் திறம்பட செயல்படுத்தி வருகிறார்.
பெண்கள் மத்தியில் நலத்திட்டம் குறித்து பட்டியல் போடுங்கள். அருந்ததியர் மக்கள் தருமபுரி, நாமக்கல் மாவட்டத்தில் அதிகம் வசிக்கின்றனர். இன்று தமிழகத்தில் அவர்கள் கல்வி பெற்றதற்கு காரணம் கலைஞர் ஆவார். 3 சதவீத இட ஒதுக்கீடு அளித்ததால் அவர்கள் டாக்டர், ஆசிரியர் என பல்வேறு உயர் பதவிகளை வகிக்கின்றார்.
இவ்வாறு அமைச்சர் வேலு பேசினார்.
வனத்துறை அமைச்சருமான மதிவேந்தன் பேசியதாவது:-
முதல்வர் தலைமையில் தமிழக அரசு 2 ஆண்டு சாதனைகளை படைத்து வருகிறது. எந்த ஆட்சியும் செய்யாத நலத்திட்டங்களை செய்துவருகிறார்.
இங்கு நிறுவப்பட்டுள்ள பேனா சிலை முன்னுதாரணம் ஆகும். வருகின்ற தேர்தல்களில் கட்சியின் வெற்றிக்கு நிர்வாகிகள் பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளரும், குமாரபாளையம் தொகுதி பொறுப்பாளருமான டாக்டர். மகேந்திரன், நாமக்கல் மாவட்ட அவைத் தலைவர் நடனசபாபதி, மாவட்ட துணை செயலாளர் மயில்சாமி, அன்பழகன், சாந்தி, மாவட்ட பொருளாளர் ராஜாராம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.