திமுக வேட்பாளர் நண்பர்கள் வீடுகளில் ஐடி ரெய்டு

Update: 2021-04-05 06:00 GMT

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளரின் நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில் 35 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடுபவர் வெங்கடாஜலம். நூற்பாலை அதிபரான இவர் திமுக வேட்பாளராக, அமைச்சர் தங்கமணியை எதிர்த்து போட்டியிடுகிறார். இந்நிலையில் வெங்கடாஜலத்தின் நண்பரான சங்கர் என்பவர் வீட்டில் நேற்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வருமான வரித் துறையினரின் சோதனை நடைபெற்றது. இதில் ஆவணங்கள் ஏதும் சிக்கவில்லை.தொடர்ந்து திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் வெடியரசம்பாளையம் பகுதியில் வசிக்கும் வேட்பாளர் வெங்கடாசலத்தின் நண்பரான மற்றொரு வெங்கடாசலம் மற்றும் அவரது தந்தை செங்கோட்டையன் ஆகியோரின் வீட்டில் மதியம் 2 மணியளவில் இருந்து தொடர்ந்து 12 மணி நேரமாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தேர்தல் சமயத்தில் பணப்பட்டுவாடா செய்வதற்காக நண்பர்கள் வீட்டில் பணம் பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடைபெறுவதாக தெரியவந்தது. இந்த சோதனையில் நாமக்கல் மாவட்ட வருமான வரித்துறையினர் தலைமையிலான குழுவினர் 5க்கும் மேற்பட்டோர் மற்றும் தேர்தல் பறக்கும் படை குழுவினர் 10 பேர் என 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்தச் சோதனையை தேர்தல் நடத்தும் குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோடுதேர்தல் செலவின கணக்கு மேற்பார்வையாளர் சாமுவேல் புட்டா நேரில் சென்று பார்வையிட்டார்.இதில் சுமார் ரூ. 35 லட்சம் மதிப்பிலான ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு திருச்செங்கோடு அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது. மேலும் உரிய ஆவணங்களை காட்டி பணத்தினை பெற்று செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் எந்தவித ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என்றும் தொடர்ந்து இன்று விசாரணை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News