மாட்டுக்கொட்டகை அமைக்க காலம் தாழ்த்தும் மாவட்ட நிர்வாகம்
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி பகுதியில் மாட்டுக்கொட்டகை அமைக்க காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.
மாட்டுக்கொட்டகை அமைக்க காலம் தாழ்த்தும் மாவட்ட நிர்வாகம்
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி பகுதியில் மாட்டுக்கொட்டகை அமைக்க காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி பகுதியில் மாட்டுக்கொட்டகை அமைக்க பல மாதங்கள் முன்பே பலர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதன் ஆய்வும் பல மாதங்கள் முன்பு நிறைவு பெற்று, ஊராட்சி நிர்வாகத்தின் பரிந்துரை கடிதமும் அனுப்பப்பட்டு விட்டது. இனியும் இது குறித்து எவ்வித நடவடிக்கை எடுக்காமல் மாவட்ட நிர்வாகம் மெத்தனமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து தட்டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பா நமக்கு உண்மையை விவரித்துக் கூறியுள்ளார். தாமதம் குறித்து தட்டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பா கூறியதாவது:
மாட்டுக்கொட்டகை அமைக்க நமது ஊராட்சியில் விண்ணப்பம் செய்திருந்தனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் மார்ச் மாதமே நேரில் வந்து ஆய்வு செய்து சென்றனர். இது குறித்து தேர்வு செய்யப்பட்ட மூன்று நபர்களுக்கான பரிந்துரை கடிதமும் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆயினும், இதுவரை மாட்டுக்கொட்டகை அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பயனாளிகள் ஊராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டே உள்ளனர். விரைவில் மாட்டுகொட்டகை அமைக்க உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் இந்த பகுதியில் பொதுக்கழிப்பிடமும் அமைத்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு அருகே தட்டான்குட்டை ஊராட்சி சார்பில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வட்டமலை, பவர்ஹவுஸ், வாசுகி நகர், குளத்துக்காடு, வேமன்காட்டு =வலசு, கோட்டைமேடு, உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து தினமும் மாலை வேளைகளில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் இந்த பூங்காவிற்கு வருகின்றனர்.
வயதானவர்களும் வருகின்றனர். தற்போது கோடைக்காலம் ஆனதால், பகல் முழுதும் வீட்டில் அடைபட்டு இருப்பவர்கள் இங்கு வந்து ஓய்வு எடுக்க பெருமளவில் வந்து கொண்டுள்ளனர். இங்கு கழிப்பிடம் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த பூங்காவை சார்ந்த இடத்தில் கழிப்பிடம் கட்டினால், பூங்காவிற்கு வருபவர்கள், கத்தேரி பிரிவு பகுதியில் பேருந்துக்காக காத்திருப்பவர்கள் என பலருக்கும் பயனுள்ளதாக அமையும். ஆகவே இந்த பகுதியில் பொதுக்கழிப்பிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.