ஆதார் மையம் தேடி அலைந்து திரிந்து அதிருப்தியடைந்து வரும் பொதுமக்கள்!

குமாரபாளையத்தில் ஆதார் மையம் தேடி அலைந்து திரிந்து பொதுமக்கள் அதிருப்தியடைந்து வருகின்றனர்.

Update: 2024-10-14 15:15 GMT

ஆதார் மையம் தேடி அலைந்து திரிந்து அதிருப்தியடைந்து வரும் பொதுமக்கள்

குமாரபாளையத்தில் ஆதார் மையம் தேடி அலைந்து திரிந்து பொதுமக்கள் அதிருப்தியடைந்து வருகின்றனர்.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா கூறியதாவது:

ஆதார் அட்டை என்பது தற்போது அனைத்து பணிகளுக்கும் மிகவும் அத்தியாவசியமாகி விட்டது. புதியதாக ஆதார் எடுப்பவர்கள், ஏற்கனவே எடுத்த ஆதாரில் சில மாற்றங்கள் செய்ய வருபவர்கள், மேலும் ஆதார் அட்டையை புதுப்பித்தல் என்பது உள்ளிட்ட பணிகளுக்கு ஆதார் மையத்தை பொதுமக்கள் பெருமளவில் தேடி வருகின்றனர். குமாரபாளையத்தில் தாலுக்கா அலுவலகம், நகராட்சி அலுவலகம், மற்றும் தலைமை அஞ்சல் நிலையம் ஆகிய மூன்று இடங்களில் ஆதார் மையம் உள்ளது. இதில் தாலுக்கா அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்தில் யாரும் வருவது இல்லை. நகராட்சி அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டும் ஒரு பணியாளர் வருகிறார். அவர் திருச்செங்கோடு ஆதார் மையத்தில் இருப்பதால், ஒரு நாள் விட்டு ஒருநாள் வருவதாக கூறப்படுகிறது. தலைமை அஞ்சல் நிலையத்தில் இருக்கும் ஆதார் மையத்தில் பிரதி சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் பணியாளர் வருகிறார். குமாரபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் இரண்டு லட்சம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அத்தியாவசிய ஆதார் பணிகள் செய்ய வந்தால், எங்கு, யார், எப்போது இருப்பார்கள் என்பது தெரியாமல் மூன்று இடங்களிலும் பொதுமக்கள் அலைந்து, திரிந்து அதிருப்தியடைந்து வருகிறார்கள். மிகவும் அத்தியாவசியமான ஆதார் மையங்களில் போதிய பணியாளர்களை நியமித்து பொதுமக்கள் சிரமத்தை போக்க மாவட்ட நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News