குமாரபாளையத்தில் கொரோனா தொற்று அதிகம் பரவுவதை தடுப்பதற்காக நகராட்சி நிர்வாகம் கிருமி நாசினிகள் தெளித்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தற்பொழுது உரு மாறிய கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்கள் உட்பட குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் சுமார் 8 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கையாக குமாரபாளையம் நகரம் முழுவதும் கிருமிநாசினிகள் தெளிக்கும் பணியை தொடங்கியுள்ளனர்.
தொடர்ந்து நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் கபசுர குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லிபாபு, நகராட்சி துப்புரவு அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து நகராட்சி முழுவதும் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எச்சரிக்கை வழங்கப்பட்டது. மேலும் மாஸ்க் அணியாமல் வெளியில் சுற்றியவர்களுக்கு 700 ரூபாயும் வணிக நிறுவனங்களில் மாஸ்க் அணியாமல் இருப்பவர்களுக்கு 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.