சென்னிமலை, சிவன்மலைக்கு 200 காவடிகளுடன் பக்தர்கள் பாதயாத்திரை
குமாரபாளையத்திலிருந்து சென்னிமலை, சிவன்மலைக்கு 200 காவடிகளுடன் முருக பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.
குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சி, நல்லாம்பாளையம் பகுதியில் இருந்து ஆண்டுதோறும் தைப்பூச திருநாளில் 200 காவடிகள் எடுத்தவாறு சென்னிமலை, சிவன்மலைக்கு முருக பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம். நேற்று தைப்பூச திருநாளையொட்டி இந்த பகுதியில் 200 காவடிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
காவடி எடுத்து பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக விரதமிருந்து வருகின்றனர். பக்தி பாடல்கள் பாடப்பட்டன. சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. காவடியுடன் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக பாதயாத்திரை தொடங்கினர்.
காவடி எடுத்து வரும் பக்தர்கள் நடந்து வரும் வழியில் பொதுமக்கள் வழி நெடுக தண்ணீர் ஊற்றி வரவேற்றனர். ஊர்வலத்தின் முன்னால் மேள தாளங்களுக்கு ஏற்றவாறு நடனமாடியவாறு பக்தர்கள் பலரும் சென்றது பார்வையாளர்களை ரசிக்க வைப்பதாக இருந்தது. பக்தர்கள் அனைவரும் அரோகரா, வேல் முருகா என கோஷமிட்டபடி சென்றனர்.