மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய பக்தர்கள்
குமாரபாளையம் ஓலப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஓலப்பாளையம் மாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கம்பம் நடப்பட்டு பூச்சாட்டுதலுடன் துவங்கியது.
காவிரி ஆற்றிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்தவாறு ஊர்வலமாக தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்தனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் சர்வ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தவாறு வந்தார்.
அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற்ற பொங்கல் வைத்தும், அக்னி சட்டிகள் கைகளில் ஏந்தியும், அலகு குத்தியவாறும் வந்தனர்.
பெண்கள் பெரும்திரளாக பங்கேற்று, மாவிளக்குகளை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.