குமாரபாளையம் மக்கள் குறை தீர்வு முகாமில் குறைந்து வரும் மனுக்கள்
குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு முகாமில் மனுக்களின் எண்ணிக்கை வாராவாரம் குறைந்து வருகிறது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் பிரதி திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் நேரில் சென்று மனுக்கள் வழங்காமல் ஆன்லைன் மூலம் மனுக்கள் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையடுத்து அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுக்களை வழங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. அவ்வாறு மனுக்கள் வழங்கப்படும்போது, மாவட்ட கலெக்டர் ஆன்லைன் மூலம் கணினி திரையில் தோன்றி மனு கொடுத்த நபரிடம் மனு சம்பந்தமான விபரம் கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வருகிறார்.
ஆனால், வட்டாட்சியர் அலுவலகத்திலும் மனுக்கள் தரலாம் என்ற தகவல் பொதுமக்களை சரியாக இதுவரை சென்றடையவில்லை. இதனால் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் பொதுமக்களின் மனுக்கள் குறைந்து வருகிறது.
ஆகவே, இது பற்றி போதிய விழிப்புணர்வை ஆட்டோ மூலம் பிரச்சாரம் செய்து பொதுமக்கள் பலரும் பயன் பெற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.