குமாரபாளையத்தில் சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணி
குமாரபாளையத்தில் போலீசார் சார்பில் சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;
நாமக்கல் மாவட்ட காவல்துறை, குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. மாணவர்கள், தனியார் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் புகையிலை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி குமாரபாளையத்தில் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஏ.டி.எஸ்.பி. செல்லபாண்டியன் பங்கேற்று, கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.
போலீஸ் ஸ்டேஷன் முன்பு துவங்கிய பேரணி, சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை, ஆனங்கூர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளின் வழியாக சென்று ராஜம் தியேட்டர் முன்பு நிறைவு பெற்றது. இதில் சைபர் கிரைம் மற்றும் புகையிலை தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான வாசகங்கள் கொண்ட பதாதைகளை ஏந்தியவாறும், விழிப்புணர்வு கோஷங்கள் போட்டவாறும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்தவாறும் மாணவ, மாணவியர் வந்தனர்.
எஸ்.ஐ.க்கள் மலர்விழி, நந்தகுமார், மோகன், சிவகுமார், போக்குவரத்து எஸ்.ஐ. சண்முகம், போக்குவரத்து போலீசார் சுகுமார், சுரேஷ், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வழி நெடுக பொதுமக்கள் ஆர்வத்துடன் இந்த பேரணியை கண்டு விழிப்புணர்வு பெற்றனர்.