கொரோனா தடுப்பூசி போட எலந்தகுட்டை மருத்துவமனையில் திரண்ட மக்கள்!
பள்ளிப்பாளையம் அருகே எலந்தகுட்டை அரசு மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் அதிகளவில் திரண்டதால் பரபரப்பு நிலவியது.
நாமக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால், தொற்று தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக, பள்ளிப்பாளையம் பகுதியில் பல்வேறு இடங்களில் தடுப்பு ஊசிகள் போடப்பட்டு வருகிறது. பள்ளிபாளையம் அடுத்த வெப்படை எலந்தகுட்டை அரசு மருத்துவமனையில், கடந்த 3 நாட்களாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட வந்து, காத்திருந்தனர். இருந்தபோதிலும் பொது மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தடுப்பூசிகள் இல்லாததால், ஏராளமானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முகாம் ஒன்றுக்கு 200 முதல் 250 தடுப்பூசிகள் வரை போடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.