குமாரபாளையம் கிரைம் செய்திகள்..!
குமாரபாளையம் பகுதியில் நடந்த கிரைம் செய்திகளை பார்க்கலாம் வாங்க.
குமாரபாளையம் கிரைம் செய்திகள்
_________________________
புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம், சீல் :
பள்ளிபாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதேவேளையில் சில கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
பள்ளிபாளையம், வெப்படை ஆகிய பகுதியில் பெட்டி கடைகள், ஓட்டல் கடைகள், பேக்கரிகள் ஆகியவற்றில் உணவு பாதுகாப்பு அதிகாரி ரங்கநாதன், எஸ்.ஐ. மலர்விழி ஆகியோர் ஆய்வு செய்தனர். ஒரு பெட்டிகடையில் ஹான்ஸ், குட்கா போன்ற புகையிலை பொருட்கள் இருந்தன. ஒரு ஓட்டல் கடையில் கெட்டுப்போன உணவும், புகையிலை பொருட்களும் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு கடைகளில் உள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்தனர். தலா இரண்டு கடைகளுக்கும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பெட்டிக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
.....................................................................
தாய், இரு மகள்கள், ஒரு மகனுடன் மாயம்
குமாரபாளையத்தில் தாய் தனது இரு மகள்கள்,ஒரு மகனுடன் மாயமானார்.
குமாரபாளையம் தம்மண்ணன் வீதியில் வசித்து வருபவர் கவுரி காஞ்சனா, (37). பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள நகராட்சி பள்ளியில் சமையல் வேலை செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் மாலை 02:00 மணியளவில் வேலை முடிந்து, வீட்டிற்கு வந்து, தனது மகள்கள் தேன்மொழி, (14), சவுமியா, (13), திலீப், (7), ஆகிய மூவரையும் அழைத்துக்கொண்டு வெளியில் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இவர்களை கண்டுபிடித்து தருமாறு, குமாரபாளையம் போலீசில் இவரது தந்தை முருகன், 60, புகார் செய்துள்ளார். இதன்படி குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து காணாமல் போன நால்வரையும் தேடி வருகின்றனர்.
________________________________________________
மனைவி மாயம் : கணவன் புகார்
குமாரபாளையத்தில் மனைவி மாயமானதாக கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
குமாரபாளையம் கத்தாளபேட்டை பகுதியில் வசிப்பவர் நந்தகுமார், (28). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி யுவராணி, (22). வீட்டில் இருந்து வருகிறார். நவ. 24ல் வேலை முடிந்து மாலை 06:00 மணியளவில் வீட்டிற்கு வந்த நந்தகுமார், வீட்டில் மனைவி இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், குமாரபாளையம் போலீசில், தன் மனைவியை கண்டுபிடித்து தருமாறு புகார் செய்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காணாமல் போன யுவராணியை தேடி வருகின்றனர்
.............................................
டூவீலர்கள் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்
குமாரபாளையத்தில் டூவீலர்கள் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.
குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் செல்லும் வழியில் முனியப்பன் தோட்டம் பகுதியில் வசிப்பவர் ஜெகநாதன், (56). டபுளிங் மெசின் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரும், இவரது வீட்டில் வசிக்கும் கணேசன், (45), என்பவரும், நவ. 25ல், மாலை 05:00 மணியளவில், தட்டான்குட்டை ஊராட்சி அலுவலகம் சென்று, வீட்டு வரி ரசீது பெற்று திரும்பி வருகையில், சேலம் கோவை புறவழிச்சாலை, சர்வீஸ் சாலையில்,டூவீலரை கணேசன் ஓட்ட, ஜெகநாதன் பின்னால் உட்கார்ந்து வந்தார். கொங்கு மண்டபம் அருகே வந்த போது, இவர்கள் வந்த டூவீலர் மீது பின்னால் வந்த டூவீலர் ஓட்டுனர், வேகமாக மோதியதில், ஜெகநாதன் பலத்த காயமடைந்தார். ஜெகநாதன் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், விபத்துக்கு காரணமான சங்ககிரி, வடுகப்பட்டியை சேர்ந்த லாரி உரிமையாளர் ராஜ்குமார், (36), என்பவரை கைது செய்தனர்.