குமாரபாளையம் பகுதி க்ரைம் செய்திகள்..
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதிகளில் நிகழ்ந்த க்ரைம் செய்திகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்வோம்.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதிகளில் நிகழ்ந்த சில க்ரைம் செய்திகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்வோம்.
சக ஊழியரை கத்தியால் குத்திய நபர் கைது:
குமாரபாளையம் பெராந்தார் காடு பகுதியில் வசிப்பவர்கள் அழகன் (வயது 58),கபீர் (48), பெம்மன்கவுடா (40). தையல் தொழிலாளிகள். குமாரபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதால், நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த அறையில் தங்கி உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 3 ஆம் தேதி பெம்மன்கவுடா மது அருந்திவிட்டு சக நண்பர்களிடம் தகராறு செய்தாராம். இதனால், அழகனும், கபீரும் அறையில் தங்காமல் இரவு நிறுவனத்திற்கு சென்று தூங்கி விட்டு, மறுநாள் காலை அறைக்கு வந்து கதவை தட்டி உள்ளனர்.
அப்போது, பெம்மன்கவுடா அவர்களை தகாத வார்த்தையால் மீண்டும் திட்டியவாறு கதவை திறந்து உள்ளார். அறையில் உள்ள பொருட்கள் அனைத்தும் சிதறி கிடப்பது கண்டு, இருவரும் கேட்டதால், அழகனை கன்னத்தில் அறைந்த பொம்மன்கவுடா அழகனை கத்தியால் குத்தினாராம்.
இதனால் பயந்து போன கபீர் வெளியே வந்து சத்தம் போட, பெம்மன்கவுடா அங்கிருந்து தப்பி ஓடினார். பலத்த காயமடைந்த அழகன் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீஸார் பெம்மன்கவுடாவை கைது செய்தனர்.
விபத்தில் முதியவர் படுகாயம்:
ஈரோடு பெரியார் நகரில் வசிப்பவர் காமாட்சி (வயது 70). இவர், தனது எதிர் வீட்டில் வசிப்பவரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்க, தனக்கு சொந்தமான காரில் சென்று உள்ளார். காரை ரவி என்பவர் ஓட்டி உள்ளார். சேலம் கோவை புறவழிச்சாலையில் கார் சென்று கொண்டிந்த போது, அதே சாலையில், காரின் பின்னால் வேகமாக வந்த லாரி மோதியதில் காமாட்சி படுகாயமடைந்தார்.
சிகிச்சைக்காக காமாட்சி ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுனரான மேட்டூரை சேர்ந்த முருகேசன் (வயது 42), என்பவரை கைது செய்தனர்.
இருசக்கர வாகனங்கள் திருடியவர் கைது:
குமாரபாளையம் காளியண்ணன் நகர் பகுதியில் வசிப்பவர் மணிகண்டன் (வயது 32). சிமெண்ட் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த 3 ஆம் தேதி ஹோட்டலுக்கு உணவு வாங்கச் சென்ற மணிகண்டனின் இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து குமாரபாளையம் காவல் நிலையத்தில் மணிகண்டன் புகார் செய்தார். வழக்குப் பதிந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் ஆய்வாளர் ரவி தலைமையிலான போலீஸார் காவேரி நகர் புதிய பாலம் பிரிவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக சென்ற இளைஞர் ஒருவர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த அருண்பிரகாஷ் (வயது 37) என்பதும், அவர் ஓட்டி வந்தது திருடப்பட்ட வாகனம் என்பதும் தெரியவந்தது. இதையெடுத்து, அருண் பிரகாஷை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்து மணிகண்டனின் இருசக்கர வாகனத்தை மீட்டனர். மேலும், அவர் அளித்த தகவலின்பேரில் மற்றொரு இருசக்கர வாகனத்தையும் போலீஸார் மீட்டனர்.