மயான பாதை ஆக்கிரமிப்பு! பொதுமக்கள் சாலை மறியல்

குமாரபாளையம் அருகே மயான பாதையை தனி ஒருவர் அடைத்து வேலி அமைத்ததை கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியல் செய்தனர்.;

Update: 2024-07-05 13:45 GMT

மயான பாதையை தனி ஒருவர் அடைத்து வேலி அமைத்ததை கண்டித்து திடீர் சாலை மறியல் செய்த கிராம மக்கள்

குமாரபாளையம் அருகே உள்ள தட்டாங்குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஓலப்பாளையம் கிராமப் பகுதியில் கோம்பு பள்ளம் எனும் ஓடை உள்ளது. சுமார் 20 அடி அகலம் கொண்ட இந்த கோம்பு பள்ளத்தில் வெள்ள நீர் போக்கியாகவும், மற்றும் பாசத்திற்கான கிழக்குக்கரை கால்வாய் பாசனத்திற்கும் இந்த பள்ளம் பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருந்து வந்தது.

இந்த ஓடை பாதை வழியாகத்தான் ஓலப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நூறாண்டுகளுக்கு மேலாக மயானத்திற்கு செல்லும் பாதையாக பயன்படுத்தி வந்தனர். தற்பொழுது இந்தப் பாதையை அடைத்து தனியார் ஒருவர் வேலி அமைத்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அந்த நபரிடம் கேட்ட போது, அது தனக்கு சொந்தமான இடம் என்றும் பட்டா தனது பெயரில் உள்ளது என்றும் தெரிவித்ததார்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் குமாரபாளையத்தில் இருந்து தேவூர் செல்லும் சாலையில் ஓலப்பாளையம் பிரிவு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது

இது குறித்து தகவலறிந்த குமாரபாளையம் காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனைக்குரிய இடத்தை ஆய்வு செய்தனர்.

பின்னர் வருவாய்த்துறையினரை வரவழைத்து, அந்த இடத்தை அளந்து நிலம் அரசு நிலமா? அல்லது தனியார் நிலமா? என பொதுமக்களிடம் தெரிவிக்க வலியுறுத்தினர். இதனையடுத்து நில அளவையர் நேரில் வந்து நிலத்தை அளக்கும் பணியில் ஈடுபட துவங்கினர். இதனால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்

Tags:    

Similar News