குமாரபாளையத்திற்கு சுத்தமான குடிநீர்: சி.பி.எம் தீர்மானம்
குமாரபாளையம் நகருக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள், சிபிஎம் கிளை மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில், சி.பி.எம் 14வது கிளை மாநாடு, சி.ஐ.டி.யூ. சங்க அலுவலகத்தில், நகர குழு உறுப்பினர் பாலுசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், வரவு-செலவு அறிக்கையை நடராஜனும், வேலை அறிக்கையை வீரமுத்துவும் தாக்கல் செய்தனர். புதிய கிளைச்செயலராக நடராஜன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இக்கூட்டத்தில், பஞ்சாலை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 477 ரூபாய் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊதியத்தை அனைத்து ஆலைகளிலும் அமலாக்க, தொழிலாளர் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஈ.எஸ்.ஐ. மருத்துவ வசதி, பி.எப்., வருங்கால வைப்பு நிதி ஆகிய திட்டங்களை அனைத்து பஞ்சாலைகளிலும், அனைத்து தொழிலாளர்களுக்கும் அமல் படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அத்துடன், குமாரபாளையம் நகரில், ஊராட்சி கோட்டை பவர் ஸ்டேஷன் நீர்த்தேக்க பகுதியில் இருந்து குழாய் அமைத்து குமாரபாளையம் நகர் முழுதும், சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிளை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சி நிர்வாகிகள் சுப்ரமணி, சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.