ஓ..இதை பார்த்தா பேய் கூட ஓடிடும்ய்யா..!கொரோனாவை விரட்ட வங்கி ஏடிஎம்மில் நூதன முயற்சி
பள்ளிபாளையத்தில் உள்ள வங்கி ஏடிஎம்மில் மருத்துவ குணமுள்ள வேப்பிலை கொத்துகள் ஏடிஎம் இயந்திரத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது.;
கொரோனா தொற்று பாதிப்பு தமிழகம் முழுவதும் சற்று குறைந்திருந்தாலும் பொதுமக்களிடையே தொற்று குறித்த அச்சம் இன்னும் முழுமையாக நீங்கவில்லை.
இதனால் பொதுமக்களும் வணிகர்களும் சானிடைஸரால் கைகளை கழுவுவது, முக கவசம் அணிவதென பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சாலையில் உள்ள வங்கி ஏடிஎம் கிளைக்கு அதிக வாடிக்கையாளர்கள் பண வர்த்தனைக்காக வந்து செல்கின்றனர்.
பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதி என்பதால் சமூக நல ஆர்வலர்கள் ஒவ்வொரு ஏடிஎம் இயந்திரத்தின் மேலும் மருத்துவ குணமுள்ள வேப்பிலையை கொத்தாக கயிறு கட்டி ஒவ்வொரு ஏடிஎம் இயந்திரத்தின் மேலும் வைத்துள்ளனர். பெரும்பாலும் கிராமப்புறங்களில் மட்டுமே மேற்கொள்ளப்படும் இந்த மாதிரியான முயற்சிகள் நகரப் புறத்திலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிராம புறங்களில் பேய் ஓட்டுவதற்கு பூசாரி கையில் கொத்தாக வேப்பிலையை வைத்திருப்பார். அதைப்போல இப்போது கொரோனாவை விரட்ட வேப்பிலை பயன்படுகிறது.