குமாரபாளையத்தில் கல்லூரி மாணவி மாயம்
குமாரபாளையத்தில் கல்லூரி மாணவி மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவி மாயம்:
குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன், 45. இவரது 17 வயது மகள், குமாரபாளையம் தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம், படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 08:30 மணியளவில் கல்லூரிக்கு பணம் செலுத்த வேண்டும் என்று 5 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து முருகேசன் குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மின் ஒயர் துண்டாகி விபத்து ஏற்படும் அபாயம்:
குமாரபாளையம் சேலம் சாலை, போலீஸ் ஸ்டேஷன் எதிரில் நேற்று மாலை 04:00 மணி அளவில் மின் ஒயர் ஒன்று துண்டாகி சாலையில் தொங்கிக்கொண்டு இருந்தது. மின் விநியோகம் அந்த ஒயரில் இருத்த நிலையில், லாரி, டெம்போ உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. போக்குவரத்தை போலீசார் சிறிது நேரம் நிறுத்தி வைத்தனர். மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க, அவர்களும் நேரில் வந்து, மின் கம்பி இணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிடம் இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒயர் இணைக்கப்பட்டதும் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.