குமாரபாளையம் : ஒரு வயது குழந்தை மீது தனியார் பள்ளி பேருந்து ஏறி குழந்தை உயிரிழப்பு..!
குமாரபாளையம் அருகே பெற்றோர் கண் முன்பே ஒரு வயது குழந்தை மீது தனியார் பள்ளி வாகனத்தின் பின் சக்கரம் ஏறியதில் குழந்தை பலியானது குறித்து வெப்படை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.;
ஒரு வயது குழந்தை மீது தனியார் பள்ளி வாகனத்தின் ன் சக்கரம் ஏறி குழந்தை பலி.
குமாரபாளையம் அருகே பெற்றோர் கண் முன்பே ஒரு வயது குழந்தை மீது தனியார் பள்ளி வாகனத்தின் பின் சக்கரம் ஏறியதில் குழந்தை பலியானது குறித்து வெப்படை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
குமாரபாளையம் அருகே உள்ள கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், அபிநயா தம்பதியினர். இவர்களுக்கு விசாகன், 5, மற்றும் ஒரு வயதில் வெற்றிவேல் என்ற குழந்தைகள் உள்ளனர். வெப்படையில் உள்ள தனியார் பள்ளியில் விசாகன் யு.கே.ஜி. படித்து வருகிறார்.
காலை வழக்கம் போல் விசாகன் பள்ளிக்கு அழைத்து செல்ல, தனியார் பள்ளியின் வேன் மணிகண்டன் வீட்டின் அருகே நிறுத்திய டிரைவர் செல்வராஜ், சிறுவன் விசாகன் வாகனத்தில் ஏறியதும், வாகனத்தை இயக்கியுள்ளார். அப்பொழுது வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்த ஒரு வயது குழந்தை வெற்றிவேல் விளையாட்டுத்தனமாக வாகனத்தின் அடிப்பகுதியில் புகுந்ததை யாரும் கவனிக்கவில்லை.
இதற்குள் வாகனத்தை இயக்கிய செல்வராஜ், வாகனத்தின் அடிப்பகுதியில் குழந்தை இருப்பதை அறியாமல் வாகனத்தை இயக்கியதால், குழந்தையின் மீது வாகனத்தின் பின் சக்கரங்கள் ஏறி இறங்கியது. இதில் குழந்தை உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஒரு வயது குழந்தை வெற்றிவேல் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்த வெப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்திற்கு காரணமான வாகனத்தை பறிமுதல் செய்து வாகன ஓட்டுனர் செல்வராஜை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். பின்னர், இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்காணிப்பு வேண்டும்
இதைப்போன்ற பல சம்பவங்களை நாம் கேட்டுவிட்டோம். ஆனால் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர் கவனமாக குழந்தைகளை கண்காணிக்கவேண்டும். இதில் யாரை குறைசொல்வது?