குமாரபாளையத்தில் 2 ஆயிரம் ஏழைகளுக்கு புத்தாடை வழங்கிய தொண்டு நிறுவனம்
குமாரபாளையத்தில் இனி ஒரு விதி செய்வோம் அமைப்பினர் சார்பில் 2 ஆயிரம் ஏழைகளுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.;
குமாரபாளையத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் 2 ஆயிரம் ஏழைகளுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
குமாரபாளையம் இனி ஒரு விதி செய்வோம் அமைப்பின் சார்பில் பல்வேறு சேவைப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒரு கட்டமாக தீபாவளியினையொட்டி 2 ஆயிரம் ஏழைகளுக்கு ஆடை வழங்கும் விழா அமைப்பாளர் கவிதா தலைமையில் நடைபெற்றது. நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர், யாசகம் பெறுவோர், உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு புத்தடைகள், இனிப்புகள், பரிசுகள் வழங்கப்பட்டன. விடியல் பிரகாஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.
இதனிடையே குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தினமும் பயிறு வகைகள் கொடுக்கும் பணி தனியார் தொண்டு நிறுவனத்தாரால் துவக்கப்பட்டது.
இனி ஒரு விதி செய்வோம் பொதுநல அமைப்பின் சார்பில் பள்ளி கட்டுமான பணிகள், உணவு, உடைகள் வழங்குதல், கல்வி உதவி தொகை வழங்கல், மருத்துவ முகாம்கள் நடத்துதல் என்பது உள்ளிட்ட பல்வேறு சேவைப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குமாரபாளையம் பாரதி நகர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு சுத்துக்கள் நிறைந்த பயிறு வகைகள் தினமும் வழங்கும் பணியை அமைப்பின் நிர்வாகி கவிதா ஜனார்த்தனன் துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியை பூங்கோதை தலைமை வகித்தார். மேலும் மாணவ, மாணவியர்களுக்கு ஆட்டுப்பாலில் தயாரிக்கப்பட்ட சோப்பு, பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. விடியல் பிரகாஷ், தீனா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
கவிதா ஜனார்த்தனன் குமாரபாளையம் ஆர்.ஏ.எஸ். தியேட்டர் முன்பு அன்பு சுவர் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இதில் பொதுமக்கள் பலரும் தங்களுக்கு உபயோகப்படாத, அல்லது அதிகமாக இருக்க கூடிய பொருட்களை, துணிமணிகளை அங்கு கொண்டு வந்து வைத்து செல்வார்கள். அதனை தேவை உள்ள மற்ற நபர்கள் யார் அனுமதியும் இல்லாமல் எடுத்து கொள்ளலாம். இந்த அன்புசுவர் பொது மக்களிடையே பெரும் புகழை பெற்று தந்தது. இவரது செயல் பலருக்கும் பயன்படக்கூடிய வகையில் இருந்தது. இதில் அடுத்த கட்டமாக இந்த அன்புசுவற்றில் உணவு பொட்டலங்கள் வைக்கபட்டன. அன்னதானம் செய்ய விரும்புவோர் இதில் உணவு பொட்டலங்களை வைத்து சென்றனர். உணவு தேவைப்படுவோர் இங்கு வந்து உணவு பொட்டலங்களை எடுத்து சென்று பசியாறி வருகின்றனர். இதே போல் திருப்பூர், ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட பல ஊர்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனால் பல்லாயிரம் பேர் பயன்பெற்று வருகின்றனர்.
ஏழைகளுக்கு கல்வி உதவி தொகை, கல்வி உபகரணங்கள் வழங்குதல், அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச உடைகள் வழங்குதல், பள்ளிகளுக்கு தேவையான அத்தியாவசியமான உதவிகள் செய்தல், யோகா பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்துதல், கண் சிகிச்சை முகாம், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை முகாம், ரத்த தான முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு இலவச மருத்துவ முகாம்களும் நடத்தி வருகிறார்கள்.
நகரப்பகுதி மற்றும் கிராமப் புறங்களில் விளையாட்டு வீரர்களை உருவாக்க, நல்ல திறமை மிக்க பயிற்சியாளர்களை கொண்டு, இளைஞர்களுக்கு விளையாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கபடி, கிரிக்கெட், தடகளம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வாலிபால், செஸ், கேரம், வாள் சண்டை, உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு, திறமையான விளையாட்டு வீரர்கள் உருவாகவும் உதவி செய்து வருகிறார்கள்.
இவர்களது சேவையை பாராட்டி பல முக்கிய பிரமுகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இவர்கள் செய்யும் சேவையால் பல ஆயிரக்கணக்கான நபர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.