மீண்டும் பிரதமராக பதவியேற்றார் மோடி; குமாரபாளையத்தில் பா.ஜ.க.வினர் கொண்டாட்டம்
மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்றதை குமாரபாளையம் பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.;
மீண்டும் பாரத பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். இதையொட்டி, குமாரபாளையம் பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற தேர்தல் ஜூன் மாதம் முதல் தேதி வரை நடந்து முடிந்தது. தமிழகத்தை பொறுத்தவரை முதல் கட்டமாக ஏப்ரல் 19ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டது. அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு வெற்றிகரமாக முடிந்த நிலையில், இந்தியா முழுதும் 64 கோடி பேர் வாக்களித்ததாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜ்குமார் தமது பேட்டியில், பெருமையாக கூறியிருந்தார். இது உலக அளவில் மிகப்பெரும் சாதனை என குறிப்பிட்டிருந்தார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜ.க. மாபெரும் வெற்றி பெற்றது. இந்திய பிரதமராக மீண்டும் நரேந்திரமோடி மூன்றாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார்.
இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக குமாரபாளையம் பா.ஜ.க.. சார்பில் ஆனங்கூர் பிரிவு, பள்ளிபாளையம் பிரிவு பகுதிகளில், மாவட்ட விளையாட்டுத்துறை தலைவர் நாகராஜ் தலைமையில், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். நரேந்திர மோடி வாழ்க, பா.ஜ.க. வாழ்க, என கோஷமிட்டனர். தரவு மேலாண்மை மாவட்ட துணை தலைவர் விவேக்பாலாஜி, மாநில ஓ.பி.சி. அணி செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணி, சிந்தனையாளர் பிரிவு மாவட்ட செயலர் கோவிந்தராஜ், நகர தலைவர் சேகர், நகர துணை தலைவர் சீனிவாசன், நகர பொது செயலர்கள் மணிகண்டன், கலைராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.