உரிமையாளரிடம் வாகனத்தை ஒப்படைத்த ஆட்டோ பைனான்ஸ் நிறுவனம்!
குமாரபாளையத்தில் ஆட்டோ பைனான்ஸ் நிறுவனத்தார் உரிமையாளரிடம் வாகனத்தை ஒப்படைத்தனர்;
குமாரபாளையத்தில் ஆட்டோ பைனான்ஸ் நிறுவனத்தார் உரிமையாளரிடம் வாகனத்தை ஒப்படைத்தனர்.
குமாரபாளையம் அம்மன் நகரில் வசிப்பவர் தினேஷ்வரன், 25. இவர் அதே பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்றுமுன்தினம் காலை 11:00 மணியளவில், தான் பணியாற்றும் நிறுவனத்திற்கு சொந்தமான டி.வி.எஸ். ஹெவி டூட்டி டூவீலரை எடுத்துக்கொண்டு வேலை விஷயமாக சென்றார். அப்போது குமாரபாளையம் சேலம் சாலையில் உள்ள ஒரு ஆட்டோ பைனான்ஸ் நிறுவனத்தினர் அந்த வண்டியை பறிமுதல் செய்ததுடன், அவரையும் அலுவலகத்தில் சிறைவைத்தனர். இவரை பார்க்க வந்த இவரது மனைவி மற்றும் குழந்தையையும் சிறை வைத்தனர்.
இது பற்றி தகவலறிந்த தினேஷ்வரனின் உரிமையாளரும், தமிழ்மாநில கூட்டுறவு பயனீட்டாளர்கள் சங்க மாநில தலைவர் பிரபாகரன் இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இவர் கூறியதாவது:
எனது பணியாளர் தினேஷ்வரன் ஆட்டோ பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்று பெரும்பாலான தொகையினை திரும்ப செலுத்தி விட்டார். அதற்காக எனது வண்டியினை எப்படி எடுக்கலாம், என்று கேட்டதற்கு, எங்கள் வண்டியை கொண்டுவந்து கொடுத்து விட்டு, உங்கள் வண்டியை எடுத்து செல்லுங்கள் என்று அடாவடியாக கூறினார்கள். இது குறித்து போலீசில் புகார் கொடுத்து உள்ளேன். பணியாளர் வண்டியை எடுத்து செல்லுங்கள் என்று கூறியிருந்தும், அதனை எடுக்காமல் எனது வண்டியை பறிமுதல் செய்து வைத்துள்ளனர். குமாரபாளையத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஆட்டோ பைனான்ஸ் உள்ளது. இவர்கள் விசைத்தறி தொழிலாளர்களுக்கு வண்டியை கொடுத்து விட்டு, முன் பணம், சில தவணைகளை பெற்றுக்கொண்டு, ஒரு தவணை செலுத்தாவிட்டாலும், வண்டியை பறிமுதல் செய்து வருகின்றனர். பயனாளிக்கு வண்டியும் போனது இல்லாமல், செலுத்திய பணமும் நஷ்டம் ஏற்படுகிறது. அதே வண்டியை மற்றொரு நபருக்கு விற்று, மீண்டும் அதே போல் லாபம் பார்கின்றனர். அத்துமீறி செயல்படும் இது போன்ற ஆட்டோ பைனான்ஸ்கள் மீது மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்ஸ்பெக்டர் தவமணி அறிவுறித்தல்படி ஆட்டோ பைனான்ஸ் நிறுவனத்தினர் எனது வாகனத்தை என்னிடம் ஒப்படைத்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்ஸ்பெகடர் தவமணி கூறியதாவது:
ஆட்டோ பைனான்ஸ் நிறுவனத்தார்கள் அத்துமீறி செயல்பட கூடாது. யாருக்கு கடன் கொடுத்தீர்களோ, அவர்களின் வண்டி மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிறர் வண்டி மீது நடவடிக்கை எடுக்க கூடாது. அவ்வாறு அத்துமீறினால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை சாலையில் உள்ள நடை பாதையில் வைக்கவும் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.