குமாரபாளையத்தில் வேட்புமனு பரிசீலனைக்காக குவிந்த வேட்பாளர்கள்

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு பரிசீலனைக்காக காலை முதலே வேட்பாளர்கள் குவிந்திருந்தனர்.

Update: 2022-02-05 11:45 GMT

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு பரிசீலனையில் காலை முதல் வேட்பாளர்கள் குவிந்தனர்.

குமாரபாளையம் நகரமன்ற தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் என 248 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களின் வேட்புமனு பரிசீலனை நேற்று காலை 10:00 மணிக்கு துவங்கியது.

இதில் பங்கேற்க அரசியல் கட்சியினர் உள்ளிட்ட வேட்பாளர்கள் காலை 09:00 மணி முதல் நகராட்சி அலுவலகம் முன் திரண்டனர். வார்டு வாரியாக நேரம் ஒதுக்கப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டது.

நகராட்சி அலுவலகம் முன் திரண்ட வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படுமா? நிராகரிக்கப்படுமா? என்ற பதத்துடன் இருப்பதை காண முடிந்தது. அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நகராட்சி அலுவலகம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் சுபநிகழ்ச்சி இருந்ததால் அங்கும் கூட்டம் அலைமோதியது.

நகராட்சி அலுவலகம் முன் நின்ற அரசியல் கட்சியினரை தாண்டித்தான் மண்டபத்திற்கு போக வேண்டும் என்பதால், திருமண வீட்டார் மண்டபத்திற்கு செல்ல பெரிதும் சிரமப்பட்டனர். நகராட்சி அலுவலகம் இருக்கும் கலைமகள் வீதி, நுழைவுப்பகுதியில் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.

Tags:    

Similar News