குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் வணிகர்கள் ஆலோசனை கூட்டம்
குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை குறித்து நகராட்சி கமிஷனர் சசிகலா தலைமையில் வணிகர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திடக்கழிவு மேலாண்மை குறித்து குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி கமிஷனர் சசிகலா தலைமையில் வணிக நிறுவனத்தாருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய நகராட்சி கமிஷனர் சசிகலா, குமாரபாளையத்தில் 22 ஆயிரத்து 053 வீடுகள், ஆயிரத்து 780 வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், பேக்கரிகள், டீ கடைகள், தினசரி காய்கறி மார்க்கெட், இறைச்சி கடைகள் உள்ளிட்ட பல வணிக நிறுவனங்கள் உள்ளன. அனைவரிடமும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து கொடுக்க சொல்லி பலமுறை நகராட்சி நிர்வாகத்தால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நகரின் தூய்மைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். அவ்வாறு பிரித்து கொடுத்தால்தான் மறு சுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தவும், எரியூட்டு பொருளாக மாற்றவும், குப்பையில் இருந்து உரம் தயாரித்தல் போன்ற பல செயல்கள் செய்திட முடியும்.
பொது இடங்களில் குப்பைகள் போடுவதோ, குப்பைகளை தீயிட்டு எரிப்பதோ குற்றம். மேலும், கேரி பேக்குகள் பயன்படுத்த கூடாது என வணிக நிறுவனங்களுக்கு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு துணிப்பை, சணல் பை, பாக்கு மட்டை, கண்ணாடி பாட்டில், கண்ணாடி டம்ளர் உள்ளிட்ட 14 வகை பொருட்கள் மூலம் பொருட்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போல் விதி மீறும் வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டு, விதி மீறும் நிறுவனங்கள் மீது அபராதம், உரிமம் ரத்து, கடைகளை பூட்டி சீல் வைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.