இன்ஸ்டா நியூஸ் செய்தி எதிரொலி: அம்மன் நகர் மக்களுக்கு கிடைத்தது வழி
இன்ஸ்டா நியூஸ் இணையதள செய்தி எதிரொலியாக, குமாரபாளையத்தில் ரோட்டோரம் இருந்த கட்டுமானக் கழிவுகள் அகற்றப்பட்டன.;
இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலியாக, குமாரபாளையம் அம்மன் நகர் பகுதி ரோடுகளில் போடப்பட்டிருந்த கட்டுமான கழிவுகள் அகற்றப்பட்டன.
குமாரபாளையம் அம்மன் நகர் பகுதியில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்து, பலர் கட்டிடங்களை கட்டியிருந்தனர். இதனால், அந்த பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணிகள், பல வருடமாக நடைபெறாமல் இருந்தது. நாளுக்கு நாள் சாலை சேதமாகி, போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
பல வருட போரட்டத்திற்கு பின், அண்மையில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி, பொக்லின் இயந்திரம் உதவியுடன் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. அவ்வாறு இடிக்கப்பட்ட கட்டிடங்களின் கட்டுமான கழிவுகள், ஒரு வாரத்திற்கு மேலாகியும் அகற்றப்படாமல் இருந்தது. கட்டிட கழிவுகளால், ரோட்டில் செல்வோர், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். விபத்து அபாயமும் இருந்தது.
இது குறித்து, நமது இன்ஸ்டாநியூஸ் இணையதளத்தில், படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக தற்போது ரோட்டோரம் கொட்டப்பட்டு இருந்த கட்டுமான கழிவுகள் அகற்றப்பட்டு, போக்குவரத்திற்கு வழி விடப்பட்டது. கழிவுகளை அகற்ற உதவிய இன்ஸ்டாநியூஸ் இணையதளத்திற்கும், கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அம்மன் நகர் பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.