ரோட்டை 'ஆக்கிரமித்துள்ள' ஆக்கிரமிப்பு கழிவு: வாகன ஓட்டிகள் அவதி
குமாரபாளையத்தில், ஆக்கிரமிப்பு கட்டிட கழிவுகளே ரோட்டை ஆக்கிரமித்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்; அவற்றை அகற்ற வேண்டும்.
குமாரபாளையம் அம்மன் நகர் பகுதியில், பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்து, பலர் கட்டிடங்களை கட்டியிருந்தனர். இதனால் இந்த பகுதியில், புதிய சாலை அமைக்கும் பணி பல வருடமாக நடைபெறாமல் இருந்தது. இதனால், நாளுக்கு நாள் சாலை சேதமாகி, போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
பல வருட போரட்டத்திற்கு பின், சில நாட்கள் முன்பு, உயர்நீதி மன்ற உத்திரவின்படி, பொக்லின் உதவியுடன் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. அவ்வாறு இடிக்கப்பட்ட கட்டிடங்களின் கட்டுமான கழிவுகள், ஒரு வாரத்திற்கு மேலாகியும் இதுவரை அகற்றப்படவில்லை.
இதனால், இவ்வழியே டூவீலர் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிக தொழிற்சாலைகள் உள்ள பகுதி என்பதால், நூல் பேல்கள் கொண்டு வரும் லாரிகள், ஜவுளிகள் கொண்டு செல்ல வரும் டெம்போக்கள், வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அடிக்கடி விபத்தும் நடப்பதால், பொதுமக்கள் மிகுந்த அதிருப்தியடைந்துள்ளனர். இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளில் கழிவுகளே தற்போது ரோட்டை ஆக்கிரமித்துள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகத்தினர் இது தொடர்பாக உரிய கவனம் செலுத்தி, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; கட்டுமான கழிவுகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.