காளியம்மன் கோவில் வாண வேடிக்கை நிகழ்ச்சியை நடத்த பா.ஜ.க. விருந்தோம்பல் பிரிவு முடிவு

குமாரபாளையம் காளியம்மன் கோவில் நிர்வாகம் நடத்தாத வாண வேடிக்கை நிகழ்ச்சியை பா.ஜ.க. விருந்தோம்பல் பிரிவு நடத்த முடிவு செய்துள்ளனர்.

Update: 2024-03-02 06:15 GMT

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் வாண வேடிக்கை ரத்து ஆனது குறித்து அறநிலையத்துறைக்கு வைத்துள்ள பேனர்

குமாரபாளையம் காளியம்மன் கோவில் நிர்வாகம் நடத்தாத வாண வேடிக்கை நிகழ்ச்சியை பா.ஜ.க. விருந்தோம்பல் பிரிவு நடத்த முடிவு செய்துள்ளனர்.

குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில் மகாகுண்டம் மற்றும் தேர்த்திருவிழா பிப். 13ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பிப். 20, மறு பூச்சாட்டுதல், பிப் 24ல் கொடியேற்றம் என தினசரி ஒரு நடந்தது. விழாவின் 15ஆம் நாளில் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் விழா நடந்தது.

இதையடுத்து இரண்டு நாட்கள் தேர்த்திருவிழா நடந்தது. தேர்த்திருவிழா நிறைவு பெற்ற நாளில், கோவில் சார்பில், கோவில் மைதானம் மற்றும் காவிரி ஆற்றில் வாண வேடிக்கை நடப்பது வழக்கம். பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இதனை காண பல ஊர்களிலிருந்து வருவார்கள். காளியம்மன் கோவிலில் மட்டும்தான் வாண வேடிக்கை நடந்து வந்தது. திடீரென்று வாண வேடிக்கை ரத்து என்றதால் ஏராளமான பேர் கோவிலுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா கூறியதாவது: எனக்கு தெரிந்து காளியம்மன் கோவில் திருவிழாவில் வாண வேடிக்கை ரத்து செய்யப்பட்டது இதுவே முதல்முறை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் ரசித்து பார்க்கும் நிகழ்ச்சி வாண வேடிக்கை விழாதான். முன்பெல்லாம் காளியம்மன் கோவில் திருவிழா என்றால், புதன் கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தினம் ஒரு நாடகம், இசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடக்கும். ஆனால் பல ஆண்டுகளாக இந்த கோவிலில் எந்த கலை நிகழ்சிகளும் நடத்தப்படுவது இல்லை. ஈரோடு மகேஷ் போன்றவர்கள் இந்த கோவிலில் வந்து பேசிய பின்தான், அம்மன் அருளால் தனியார் தொலைக்காட்சிகளில் பங்கேற்று, தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகிறார். இவர் போல் பல கலைஞர்கள் இங்கிருத்து முன்னேறியுள்ளனர். கலை நிகழ்சிகளை பார்க்கவே சுற்றியுள்ள கிராமப்பகுதி, அருகில் உள்ள பவானி பகுதியினர் திரண்டு வருவார்கள். காளியம்மன் கோவில் திருவிழா முன்பு போல் சிறப்பு இல்லை என்பதுதான் பெரும்பான்மையோரின் கருத்தாக உள்ளது என கூறினார்

இந்நிலையில் பா.ஜ.க. விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தங்கவேல் கூறுகையில்  காலம் காலமாக காளியம்மன் திருவிழாவில் வாண வேடிக்கை நடத்தப்படுவது வழக்கம். இதுவரை இல்லாத நிகழ்வாக, இந்த ஆண்டு வாண வேடிக்கை நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது மிகவும் வேதனைக்குரியது ஆகும்.

இதற்கு காரணம் விழாக்குழுவினர், காவல்துறை மற்றும்  தீயணைப்பு துறையினரிடம் முறையான அனுமதி பெறவில்லை என அறநிலையத்துறை சார்பிலும், அறநிலையத்துறை அனுமதி தரவில்லை என திருவிழாக்குழு தரப்பினரும் கூறி வருவது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அறநிலையத்துறை அல்லது கோவில் நிர்வாகம் நடத்தாத வாண வேடிக்கை நிகழ்ச்சி நடத்த பா.ஜ.க. விரும்தோம்பல் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. இருவரும் செய்யாவிடில், மாவட்ட விரும்தோம்பல் பிரிவு சார்பில், வாண வேடிக்கை நிகழ்ச்சி நடத்தவுள்ளது. அதற்கு அறநிலையத்துறை சார்பில் அனுமதி கேட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News