தி.மு.க. ஆட்சி பற்றி பாஜக பொதுச்செயலாளர் ராமசீனிவாசன் விமர்சனம்
குமாரபாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பா.ஜ.க. பொதுச்செயலாளர் ராமசீனிவாசன் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.;
அக்கா வசம் ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு, மச்சான் கிட்ட பல ஆயிரம் பறிக்கும் ஆட்சி தி.மு.க என பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் ராமசீனிவாசன் பேசினார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பா.ஜ.க. சார்பில் நரேந்திர மோடியை 3வது முறையாக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சரவணராஜன் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ராமலிங்கம், மாநில பொதுச்செயலாளர் ராமசீனிவாசன் பங்கேற்று பேசினார்.
இந்த கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ராமசீனிவாசன் பேசியதாவது:-
உங்கள் வாக்குகளை 500, ஆயிரத்திற்கு விற்றால் பல கோடிகளை ஆட்சியாளர்கள் கொள்ளையடித்து விடுகிறார்கள். தற்போது 8.5 லட்சம் கோடி கடன் தமிழ்நாட்டிற்கு உள்ளது. தி.மு.க. அந்த அளவுக்கு சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது. பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு, மின்சாரம், பால், பேருந்து கட்டணம், உள்பட பல வகைகளில் விலை உயர்த்தி வருகிறார்கள். அக்கா வசம் ஆயிரம் கொடுத்து விட்டு, மச்சான் வசம் பல ஆயிரம் பறிக்கும் ஆட்சியாக தி.மு.க. செயல்பட்டு வருகிறது. 40க்கு 40 என்ற எண்ணத்தில், இடைத்தேர்தலில் வெற்றி என்ற களிப்புடன் இருந்து வரும் தி.மு.க.வினருக்கு 2026 தேர்தல் அப்படி இருக்காது.
தி.மு.க. என்றால் ரவுடி ராஜ்ஜியம் தான். கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் அண்ணாமலையை பற்றி அவதூறு பேசி வருகிறார். இதனை பா.ஜ.க. ஏற்காது. சட்டத்தின் முன் நிறுத்தி, சிறைக்கு அனுப்புவோம். ரஷ்ய நாட்டின் உயரிய விருதினை நம் பிரதமர் மோடிக்கு கொடுத்துள்ளனர். கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்த போது மேகதாதுவில் அணை கட்டுவது பற்றி யாராவது பேசினார்களா? தனது தேர்தல் அறிக்கையில் மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று அறிவித்த காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய சென்று வந்தார். இது வெட்ககேடு. ஒருவருக்கொருவர் முரண்பாடாக உள்ள கூட்டணிதான் இந்தியா கூட்டணி.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் வழக்கறிஞர் தங்கவேல், மண்டல தலைவர் சேகர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணி, நகர செயலாளர் சரவணன், முன்னாள் தலைவர் கணேஷ்குமார், உள்பட பலர் பங்கேற்றனர்.