கொரோனா தொற்று பிரச்சனை காரணமாக வங்கிகளில் அதிக அளவு மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் தமிழக அரசும் நாமக்கல் மாவட்ட நிர்வாகமும் வங்கிகள் செயல்படும் வேலை நேரத்தை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் மாதத்தின் தொடக்க வாரமாக இருப்பதால் ஏராளமான வயதான பெண்மணிகள் முதியவர்கள் தங்கள் ஓய்வூதிய பணத்தை எடுக்க வங்கிகளில் திரண்டனர். ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் இருந்த காரணத்தினால் வங்கி ஊழியர்கள் இங்கே கூட்டம் கூட கூடாது எனவே நாளை வாருங்கள் என பலரையும் திருப்பி அனுப்பி வருவதால் முதியோர் பென்சன் வாங்க முடியாமல் முதியவர்களும் முதிய பெண்மணிகளும் வயதானவர்களும் திண்டாடி வருகின்றனர்.
வங்கிகளின் வேலை நேரம் குறைக்கப்பட்டதால் வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களை வங்கி உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்புவதில் குறியாக இருப்பதாக முதியோர் பென்சன் வாங்க வந்த வயதான பெண்மணிகள் சிலர் நம்மிடம் கருத்து தெரிவித்தனர்.
தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் முதியோர் உதவித்தொகை பென்சனை அவரவர் வீடு அருகில் உள்ள பொதுவான இடத்திலேயே கடந்த காலத்தில் தந்தது போல் தந்து உதவிட வேண்டுமென அரசுக்கு சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.