அகில பாரத ஐயப்பா சேவா சங்க மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம்
அகில பாரத ஐயப்பா சேவா சங்க மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் குமாரபாளையத்தில் நடந்தது.;
அகில பாரத ஐயப்ப சேவா சங்க மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் மாவட்ட செயலர் ஜெகதீஷ் தலைமையில் குமாரபாளையத்தில் நடந்தது. இதில் ஜெகதீஷ் பேசியதாவது:
சபரிமலை மகரவிளக்கு சீசனில் ஒரு கோடி பக்தர்களுக்கும் மேலாக சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். ஆனால் ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பேருக்கு மட்டுமே ஆன் லைனில் தேவசம் போர்டு அனுமதி கொடுத்துள்ளது. இந்த உத்திரவை கடைபிடித்தால், இந்த சீசனில் 80 லட்சம் பேர் மட்டுமே சுவாமி தரிசனம் பெற முடியும்.
மாலை போட்டு விரதமிருக்கும் மீதமுள்ள 50 லட்சம் பக்தர்கள் ஆண்டு முழுதும், விரதம் இருக்க வேண்டும் என தேவசம் போர்டு நினைக்கிறதா? இந்த உத்திரவை வாபஸ் பெற வேண்டும். பத்துக்கும் அதிகமான ஸ்பாட் ஆன்லைன் தரிசன பதிவை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
சபரிமலை சந்நிதானம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சேவை செய்து கொண்டிருந்த அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தினரை அகற்றிவிட்டு, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 5 ஆயிரம் தொண்டர்களை நியமனம் செய்யும் முடிவு கண்டிக்கத்தக்கது. அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் கேரளா மாநிலம் தோன்றுவதற்கும், தேவசம் போர்டு உருவாவதற்கும் முன்பிருந்தே சபரி மலையில் சேவை செய்து வரும் ஐயப்ப பக்தர்கள் அமைப்பாகும்.
அந்த அமைப்பையும், அமைப்பின் சார்பில் செய்து வரும் மருத்துவ சேவையையும், பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் சபரிமலையிலிருந்து வெளியேற்றும் தேவசம் போர்டின் நடவடிக்கை, சேவை செய்ய வரும் தொண்டர்களிடையே அதிருப்தியை தருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தேவசம் போர்டு மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்வது, ஐயப்ப பக்தர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாவட்ட தலைவர் பிரபு, மத்திய, மாநில துணை தலைவர் பாலசுப்ரமணியாம், மாவட்ட பொருளர் செங்கோட்டையன் உள்பட பலர் பங்கேற்றனர்.