குமாரபாளையம் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி: டிஎஸ்பி., ஆய்வு
குமாரபாளையம் ஏடிஎம் இயந்திரத்தில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமாரபாளையம் - பள்ளிபாளையம் சாலையில் சேலம், கோவை புறவழிச்சாலை மேம்பாலம் அருகே உள்ள கனரா வங்கி ஏ.டி.எம். அமைந்துள்ளது. இங்கு பணம் எடுக்க வந்த பொதுமக்கள் சிலர், ஏ.டி.எம். இயந்திரத்தில் வெல்டிங் வைத்து கொள்ளை முயற்சி நடந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் ஸ்ப்ரே பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து குமாரபாளையம் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். இதனையடுத்து, திருசெங்கோடு டி.எஸ்.பி. சீனிவாசன், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ.-க்கள் சேகரன், மலர்விழி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கைரேகை நிபுணர்கள், தடயவியல் வல்லுநர்கள் நேரில் வந்து கை ரேகை பதிவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். அக்கம் பக்கம் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.