குமாரபாளையம் கற்பக விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
குமாரபாளையம் கற்பக விநாயகர் கோயிலில் இன்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
குமாரபாளையம் கோட்டைமேடு சாந்தபுரி நகரில் கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.
நேற்று முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இன்று அதிகாலை 3 மணிக்கு மூன்றாம் கட்ட யாக சாலை பூஜை, அதிகாலை 4:30 மணிக்கு கோபுர கலசத்திற்குப் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதே கோவிலில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, மீனாட்சி சுந்தரேஸ்வரர், பாலமுருகன், துர்க்கை, ஜலகணபதி, நாகர்கள் மற்றும் நவகிரகங்கள் சுவாமிகளுக்கும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பவனி சங்கமேஸ்வரர் கோயில் ஈரோடு ஆதீனம் பாலாஜி சிவம் தலைமையில் ஜனார்த்தன சிவம், அரவிந்த் ஐயர் குழுவினர் யாகசாலை பூஜைகள் மற்றும் கும்பாபிஷேக விழாவை நடத்தினர்.
காஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தான வித்வான் அங்குராஜ், கார்த்தியின் நாதஸ்வர நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில, மாவட்ட விருதுகள் பெற்ற ஸ்தபதி சின்ன சக்தி ஆலயத்தை நிர்மாணித்திருந்தார். பக்தர்களுக்குப் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.