கிருத்திகையையொட்டி குமாரபாளையம் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

கிருத்திகையையொட்டி குமாரபாளையம் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2024-06-05 09:51 GMT

கிருத்திகையையொட்டி குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே பாலமுருகன் கோவிலில், முருகன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

கிருத்திகையையொட்டி குமாரபாளையம் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில் கிருத்திகையையொட்டி முருகன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடந்தன. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுவாமிகள் வலம் வந்தனர். அரோகரா என்ற சரண கோஷத்துடன் சுவாமிகளுடன் கோவிலை பக்தர்கள் சுற்றி வலம் வந்தனர். இதே போல் சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், சின்னப்பநாயக்கன்பாளையம், காந்தி நகர் அங்காளம்மன் கோவில்கள், உடையார்பேட்டை ராஜவிநாயகர் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், போலீஸ் ஸ்டேஷன் அருகே பாலமுருகன் கோவில், உடையார் பேட்டை ராஜ விநாயகர் கோவில், கோட்டைமேடு சிவன் கோவில், கள்ளிபாளையம் சிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் முருகன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

முருகன் பெருமைகள் குறித்து ஆன்மீக அன்பர்கள் கூறியதாவது:-

முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் இந்துக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிக்கு மகனாவார். முருகன் இந்திய துணைக்கண்டத்தில் பண்டைய காலம் தொட்டு வணங்கப்படும் ஒரு முக்கிய தெய்வமாக இருந்து வருகிறார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் பழனி மலையில் வசிக்கும் ஆண்டவராகப் போற்றப்படுகிறார். சங்க காலத்தில் குறிஞ்சி நிலப்பகுதியின் தெய்வமாக போற்றப்பட்டார். தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டினைச் சைவ சமயம் இணைத்துக் கொண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். கௌமாரம் முருகன் வழிபாட்டினைச் குறிக்கும்.

சிவபெருமான் தனது நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதைத் தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாகக் கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்து சமய நூல்கள் கூறுகின்றன. தென்னிந்திய முறைப்படி, இவர் கணங்களின் அதிபதியான கணபதிக்குத் தம்பியாகக் கருதப்படுகிறார் மற்றும் முருகனுக்கு தெய்வானை மற்றும் வள்ளி மனைவிகளாவர்.

முருகன் எப்போதும் இளமையுடன் இருக்கும் கடவுளாக, மயில் சவாரி செய்யும் மற்றும் சில சமயங்களில் சேவல் கொடி கொண்டும் இருப்பார். அவர் தனது தாயார் பார்வதியால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் வேல் எனப்படும் ஈட்டி ஆயுதம் பயன்படுத்துகிறார். பெரும்பாலான சின்னங்கள் அவரை ஒரே ஒரு தலையுடன் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன, சிலவற்றில் ஆறு தலைகள் உள்ளன, அவை அவரது பிறப்பைச் சுற்றியுள்ள புராணத்தைப் பிரதிபலிக்கின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News