குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன் இலவச வீட்டுமனை கேட்டு தர்ணா போராட்டம்
குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன் இலவச வீட்டுமனை கேட்டு தர்ணா போராட்டம் நடந்தது.;
குமாரபாளையம் தாலுகா அலுவலக வாசலில் இலவச வீட்டுமனை கேட்டு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். இவர்கள் தாசில்தார் சண்முகவேலிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்ததாவது:-
குமாரபாளையம் தாலுகாவில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் குடியிருப்பதற்கு வீடும், மனையும் இல்லாமல் புறம்போக்கு இடங்களிலிலும், வாடகை வீடுகளிலும் கூட்டு குடும்பங்களாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல முறை வட்டாட்சியர் வசம் மனு கொடுத்து உள்ளோம். கிராம சபா தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. வீட்டுமனை நிலம் கேட்டு விண்ணப்பித்த இந்த மக்களுக்கு மனை இடமோ, பட்டாவோ வழங்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் சுற்றுப்புற பகுதிகள் மாசடைவதை தடுக்க வேண்டும் என சி.ஐ.டியூ. சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. எஸ்.பி.பி. காகித ஆலை, பொன்னி சர்க்கரை ஆலை ஆகிய உள்ளன. சாயப்பட்டறைகளில் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாததால், காவேரி ஆற்று நீர் மாசடைந்துள்ளது. சாயப்பட்டறை பாய்லர்களிலிருந்து வெளியேறும் கரித்துகள்கள் பெரும் மாசு ஏற்படுத்தி வருகிறது. காகித ஆலை, சர்க்கரை ஆலைகளில் வெளியேறும் கரி தூள், பக்காஸ் துகள்கள், சுண்ணாம்பு துகள்கள் அப்பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. விவசாய நிலங்களில் சாயப்பட்டறை அமைக்க அனுமதி கொடுக்க கூடாது. அனைத்து சாயப்பட்டறையினர் மாசுக்கட்டுப்பாட்டுதுறையினர் பின்பற்ற சொல்லும் வழிகாட்டுதல்கள் பின்பற்ற வேண்டும். பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். ஒலி மாசு ஏற்படுவதையும் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவினை நிர்வாகிகள் அசோகன், பாலுசாமி உள்பட பலர் கொடுத்தனர்.