கேபிள் பதிக்கும் பணி நிறைவு பெற்றதால் மின் கம்பங்கள் அகற்றும் பணி துவக்கம்

குமாரபாளையத்தில் கேபிள் பதிக்கும் பணி நிறைவு பெற்றதால் மின் கம்பங்கள் அகற்றும் பணி துவக்கப்பட்டு உள்ளது.;

Update: 2024-01-24 12:26 GMT

குமாரபாளையம் ராஜம் தியேட்டர் பகுதியில் புதைவிட மின் பாதை கேபிள்கள் அமைக்கப்பட்டதால், அங்கிருக்கும் மின் கம்பங்கள் அகற்றும் பணி துவங்கியது.

குமாரபாளையத்தில் கேபிள் பணி நிறைவு பெற்றதால் கம்பங்கள் அகற்றும் பணி துவக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகரில் மாநிலத்தில் முதன்முறையாக புதைவட மின் கம்பிகள் அமைக்கும் பணி, அ,தி.மு.க. ஆட்சியில் துவக்கப்பட்டது. சுமார் இரண்டு ஆண்டு காலமாக இந்த பணி நகர் பகுதி முழுவதும் செயல்படுத்தப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக கேபிள் அமைக்கப்பட்ட பகுதிகளில் தேவையில்லாத மின் கம்பங்கள் அகற்றும் பணி துவங்கியுள்ளது.

இது பற்றி மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழக அரசின் சார்பில் புதைவட மின் பாதை குமாரபாளையத்தில் அமைக்கப்பட்டது. இந்த பணி நிறைவு பெற்ற பகுதிகளில், தேவையில்லாமல் இருக்கும் மின் கம்பங்கள் அகற்றும் பணி துவங்கி நடந்து வருகிறது. இது படிப்படியாக அனைத்து பகுதியிலும் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் அகற்றப்படும். மின் தடை இல்லாத நகரமாக இருக்க மின்வாரியம் சார்பில் அனைத்து முயற்சிகளும், பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இந்நிலையில் நேற்று சேலம் சாலை ராஜம் தியேட்டர் பகுதியில் மின் கம்பம் அகற்றப்பட்டது. இதே போல அனைத்து பகுதியிலும் மின் கம்பங்கள் அகற்ற பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் மகளிரணி மாவட்ட அமைப்பாளர் சித்ரா கூறியதாவது:-

நகரில் முக்கிய சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள, சாலையின் நடுவில் உள்ள மின் கம்பங்கள் அகற்றினால், போக்குவரத்திற்கு உதவியாக இருக்கும். ஆகவே அனைத்து பகுதியிலும் சாலை நடுவில் உள்ள மின் கம்பங்களை அகற்ற வேண்டும். கலைமகள் வீதி நகராட்சி திருமண மண்டபம் அருகே ஆற்றுக்கு செல்லும் வழியில், நடுவே உள்ள மின் கம்பம், காவேரி நகர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள மின் கம்பம் ஆகியவைகளை அகற்றி சாலை ஓரமாக அமைக்க வேண்டும். மேலும் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் வெளியே வரும் இடம் எதிரில், சேலம் சாலையில், சாலையோரம் மின்மாற்றி உள்ளது. பின்புறம் காலியாக இருந்தும், சாலையில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனை பின்புறமாக மாற்றியமைத்தால், வாகன போக்குவரத்திற்கு உதவியாக இருக்கும். விபத்துகள் ஏற்படுவது குறையும். பொதுமக்கள் அச்சமின்றி செல்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News