குமாரபாளையத்தில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்
பொங்கல் விழாவையொட்டி குமாரபாளையத்தில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
குமாரபாளையம் பாண்டுரங்கர்கோவில், ராமர் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி உற்சவ விழாவில், சொர்க்கவாசல் திறப்பு, துவாதசி விரத பூஜை, அனுமன் ஜெயந்தி விழா, கூடாரவல்லி சிறப்பு பூஜை உள்ளிட்ட வைபவங்கள் நடந்தது. இதன் ஒரு கட்டமாக நேற்று ஆண்டாள் திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று ராமர் கோவிலில் திருப்பாவை பாராயணம் மற்றும் பஜனை நடைபெறவுள்ளது.
நேற்று பொங்கல் விழாவையொட்டி குமாரபாளையம், விட்டலபுரி பாண்டுரங்கர் கோவிலில் பாண்டுரங்கர், மகாலட்சுமி தாயார், விடோபா தாயார், ஆண்டாள் தாயார், ஆஞ்சநேயர் சுவாமி மற்றும் கருடாழ்வாருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பக்தர்கள் சார்பில் பக்தி பஜனை நிகழ்ச்சி நடந்தது. இதே போல் குமாரபாளையம் ராமர் கோவில், லட்சுமி நாராயண சவாமி கோவில், தாமோதர பெருமாள் கோவில், திருவள்ளுவர் நகர் சவுந்திரராஜ பெருமாள் கோவில், தட்டான்குட்டை புருஷோத்தம பெருமாள் கோவில், சின்னப்பநாயக்கன்பாளையம் பெருமாள் கோவில், கள்ளிபாளையம் பெருமாள் கோவில், உள்ளிட்ட பல பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.