அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு

குமாரபாளையம் அருகே அரசு அனுமதியில்லாமல் நடந்த பார், கலெக்டர் உத்தரவுப்படி வருவாய்த்துறையினர் மற்றும் போலீசாரால் மூடப்பட்டது.;

Update: 2024-05-20 13:30 GMT

குமாரபாளையம் அருகே கோட்டைமேடு பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் நடந்து வந்த பார்.

குமாரபாளையம் அருகே அரசு அனுமதியில்லாமல் நடந்த பார், கலெக்டர் உத்தரவுப்படி வருவாய்த்துறையினர் மற்றும் போலீசாரால் மூடப்பட்டது.

குப்பாண்டபாளையம் ஊராட்சி பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிய புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கோட்டைமேடு கிராமத்தில் சாணார்பாளையம் போகும் வழியில் அமைந்துள்ள தென்றல் நகர் அருகில் விவசாய இடம் மற்றும் பல குடியிருப்புகள் உள்ள எங்களது பகுதியில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் அனுமதியும் இல்லாமல் மதுபானங்கள் விற்பனை செய்யும் பார் திறந்துள்ளார்கள். இந்த பார் அருகில் உள்ள சாலையில் தான் குடும்பப் பெண்களும், குழந்தைகளும் கோட்டைமேடு பேருந்து நிலையத்திலிருந்து நடந்து வர வேண்டும். இவ்வழியில் இடையூறாக பாட்டில்களை உடைப்பது, சாலையில் அமைந்துள்ள பாலங்களில் அமர்ந்து மதுபானங்களை அருந்துவது போன்ற அருவருப்பான செயல்களை செய்து கொண்டுள்ளனர்.

எந்த ஒரு இடையூறும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த எங்களுக்கு கடந்த சில நாட்களாக, இந்த பார் மிகுந்த இடையூறாகவும், மன வருத்தத்தை ஏற்படும் வகையிலும் இருக்கிறது. மேலும் நாங்கள் இந்த பகுதியில் வாழலாமா? வேறு பகுதிக்கு வீட்டை மாற்றிக் கொள்ளலாமா? என்ற அளவிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது. மற்றும் நாங்கள் குடியிருக்கும் வீடு மற்றும் மனை அரசு அனுமதி பெற்ற குடியிருப்பு ஆகும்.

நாங்கள் இந்த பகுதியில் வசிக்க வேண்டும் என்றால் இந்த மதுபான பாரினை வேறு இடத்திற்கு மாற்றுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை அடுத்து மாவட்ட கலெக்டர், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசாரை நேரில் அனுப்பி விசாரணை செய்ய அறிவுறுத்தினார். அதன்படி நேரில் சென்ற அதிகாரிகள், அனுமதி இல்லாமல் நடந்த பாரினை மூடினர்.

இது குறித்து வருவாய்த்துறையினர் கூறியதாவது:

கலெக்டர் உத்தரவுப்படி நேரில் சென்று, அரசு அனுமதியில்லாமல் நடந்த அந்த பாரினை அடைத்து வந்துள்ளோம். இட உரிமையாளரை நேரில் வர சொல்லியுள்ளோம். விசாரணை செய்யப்பட்டு, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News