குமாரபாளையம் சமயபுரம் மாரியம்மன் திருவிழாவையொட்டி அம்மன் திருவீதி உலா
குமாரபாளையம் சமயபுரம் மாரியம்மன் திருவிழாவையொட்டி அம்மன் திருவீதி உலா நடந்தது.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மேற்கு காலனியில் ஒவ்வொரு ஆண்டும் திருநங்கை மாதம்மாள் தலைமையில் சமயபுரம் மாரியம்மன் திருவிழா நடைபெறுவது வழக்கம். 16வது ஆண்டு திருவிழா நேற்று துவங்கியது.
காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம், அம்மன் திருவீதி உலா வைபவம் நடந்தது. இதில் பச்சை கரகம், பூங்கரகம் எடுத்து அம்மனை அழைத்து வந்ததுடன், நவசக்தி வேடங்கள் போட்டவாறும், மாகாளி வேடம் போட்டவாறும், அக்னி கரகம் எடுத்தவாறும் பக்தர்கள் பலரும் பங்கேற்றனர். மேற்கு காலனி பகுதியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. இன்று காலை மாவிளக்கு, பொங்கல் வைத்தல், அம்மனுக்கு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெறவுள்ளன.
மாலை பூத பலி பூஜை, மஞ்சள் நீராட்டு விழா, மகா தீபாராதனை நடைபெறவுள்ளது. விழாவையொட்டி இன்று இரவு மேற்கு காலனி பகுதியில் தெருக்கூத்து நடைபெறவுள்ளது.