அதிமுக ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்..!
பள்ளிபாளையத்தில் அதிமுக ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி, பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய அ.இ.அ.தி.மு.க ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம், ஆலாம்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில், நாமக்கல் மாவட்ட செயலாளர் மற்றும் மாநில அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடந்தது.
பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் செந்தில் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில அம்மா பேரவை இணை செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபு பங்கேற்றார்.
கூட்டத்தில் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலாம்பாளையம் பேரூராட்சியை சேர்ந்த 23 ஓட்டுச்சாவடிகள், காடச்சநல்லூர், பாப்பம்பாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், சமயசங்கிலி, ஓடப்பள்ளி, கொக்கராயன் பேட்டை, பாதரை, புதுப்பாளையம் ஊராட்சிகளை சேர்ந்த 60 என மொத்தம் 83 ஓட்டுசாவடிகளை சேர்ந்த ஆயிரத்து 577 முகவர்களை சந்தித்து, வரும் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது எப்படி? யார் யாருக்கு என்னென்ன பணி? என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
குமாரபாளையத்தில் அ.தி.மு.க. 52வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நகர செயலர் பாலசுப்ரமணி தலைமையில் நடந்தது. இதில் பேசிய குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் நிர்வாகிகள், தி.மு.க. அரசின் அராஜக போக்கை கண்டித்து பேசினார்கள். முன்னாள் நகராட்சி தலைவர் தனசேகரன், கவுன்சிலர்கள் பழனிசாமி, புருஷோத்தமன், நகர துணை செயலர் திருநாவுக்கரசு, பள்ளிபாளையம் நிர்வாகிகள் செந்தில், வெள்ளிங்கிரி, சுப்பிரமணி, உள்பட பலர் பங்கேற்றனர்.
பள்ளிபாளையம் ஒன்றிய செயலர் செந்தில் பேசியதாவது:
தி.மு.க.வினர் எதுவும் செய்வது இல்லை என குற்றச்சாட்டு உள்ளது. ஏனெனில், முன்னாள் அமைச்சர் தங்கமணி குமாரபாளையம் நகருக்கு தேவையான எல்லாம் செய்து தந்து விட்டார். அதனால் அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அதனால் விதி மீறி பல சட்ட விரோத செயல்களை செய்து வருகிறார்கள். முன்னாள் அமைச்சர் தங்கமணியை தோற்கடிக்க பல வியூகங்கள் செய்து வருவதாக அறிந்தேன். இனி ஒருவன் பிறந்து தான் வரவேண்டும், தங்கமணியை தோற்கடிக்க. இவ்வாறு அவர் பேசினார்.