குமாரபாளையம் நகர்மன்ற கூட்டத்தில் அதிமுக, திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
குமாரபாளையம் நகரமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க, கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
குமாரபாளையம் நகரமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க,வினர் வெளிநடப்பு செய்தனர்.
குமாரபாளையம் நகரமன்ற கூட்டம் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. லஞ்சம் வாங்காதே, ஊழல் செய்யாதே போன்ற பல வாசகங்களுடன் கூடிய தட்டிகளுடன் கூட்ட அரங்கில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளே நுழைந்தனர்.
துணை சேர்மன் வெங்கடேசன்:
ஒப்பந்ததாரர்களை பங்கேற்க விடாமல் சில சுயேச்சை கவுன்சிலர்கள் சேர்மன் அறையில் இருந்து கொண்டு மிரட்டுவதாக புகார் வந்துள்ளது.
பாலசுப்ரமணி (அ.தி.மு.க.) : 2 மாதத்திற்கு முன் துவங்கப்பட்ட, அனுபவமில்லாத நிறுவனத்திற்கு பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் சுயேச்சை கவுன்சிலரின் ரத்த சம்பந்தம் உள்ள உறவினர். அனுபவமிக்க நிறுவனங்களுக்கு பணிகளை தராமல் இவர்களுக்கு கொடுக்க காரணம் என்ன? தலைவர் லஞ்சம் வாங்கி விட்டாரா? விண்ணப்பம் செய்த குறிப்பிட்ட நிறுவனத்திற்கு பணிகள் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 29,30 என்ற வரிசை எண்கள் கொண்ட இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்ற கூடாது.
(அ.தி.மு.க. கவுன்சிலர் புருஷோத்தமனும் இதே கருத்தை கூறினார். )
விஜய் கண்ணன் (சேர்மன்): குறிப்பிட்ட நிறுவனத்திற்கு பணிகள் கொடுக்க சொல்லும் கவுன்சிலர் அந்த நிறுவனத்திடம் லஞ்சம் பெற்று விட்டாரா? இதே நிறுவனத்திற்கு பணிகள் தரக்கூடாது என இதே கவுன்சிலர் மன்றத்தில் வாதிட்டதை யாரும் மறக்க முடியாது. பாதியில் பணிகள் நிறுத்தப்பட்டால் பணியாளர்களுக்கு சம்பளம் தர முடியாத நிலை ஏற்படும்.
(சேர்மன், துணை சேர்மன் இருவரும் கூட்ட அரங்கை விட்டு வெளியே சென்று சில நிமிடம் பேசிவிட்டு வந்தனர்)
பாலசுப்ரமணி (அ.தி.மு.க): ஆணையாளரை சந்திக்க சென்றால் பதவியை விட்டு நீக்கம் செய்து விடுவேன் என மிரட்டுகிறார். நீக்கி விடுவாரா?
விஜய்கண்ணன்(சேர்மன்): சேர்மன் அறையில் நடந்தது குறித்து இங்கு பேச கூடாது.
விஜயகுமார் (கமிஷனர்): 30வது வார்டு கவுன்சிலர் எல்லை மீறி பேசுவதை தவிர்க்க வேண்டும். இங்கு அது பற்றி பேச உரிமையில்லை.
வெங்கடேசன் (துணை சேர்மன்): கமிஷனர் மக்களை சந்திக்க மறுத்து வருகிறார். மனு கொடுக்க பொதுமக்கள் வந்தால் சேர்மனை பார்க்க சொல்கிறார்.
சத்தியசீலன் (தி.மு.க.): குறிப்பிட்ட கவுன்சிலர்களுக்கு மாதம் 10 ஆயிரம் தரப்படுகிறது.
ரங்கநாதன் (தி.மு.க.) : சுயேச்சை தலைவர் ஊழல் செய்கிறார்.
பழனிச்சாமி (அ.தி.மு.க.): எங்கள் பகுதியில் ரேசன் கடை பழுதானது. கடை உரிமையாளர் கடையை காலி செய்ய சொல்கிறார். இடம் பார்த்து ரேசன் கடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜேம்ஸ் (தி.மு.க.): ரேசன் கடைகளில் ரேகை வைக்கும் பிரச்சனை அனைத்து வார்டுகளில் பெரும் பிரச்சனையாக உள்ளது. இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். கூலி தொழிலாளர்கள் அடிக்கடி வேலையை, வருமானத்தை விட்டு விட்டு ரேசன் கடை செல்லும் நிர்பந்தம் ஏற்படுகிறது. அப்படி சென்றாலும், அவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
வேல்முருகன் (சுயேச்சை): ஒ.ஏ.பி. நிறைய பேருக்கு கிடைக்காமல் உள்ளது. பைப் லீகேஜ் ஆகி வருகிறது.
விஜய்கண்ணன் (சேர்மன்): புதிய தாசில்தார் வந்துள்ளார். நடவடிக்கை எடுக்க சொல்வோம். பைப் லீகேஜ் ஆகி வருவது குறித்து அனைத்து வார்டுகளிலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அம்பிகா (தி.மு.க.) நாய் தொல்லைகள் அதிகம் உள்ளது.
விஜய்கண்ணன் (சேர்மன்): ஒரு நாய்க்கு கருத்தடை செய்ய 900 ரூபாய் ஆகிறது.
அம்பிகா (தி.மு.க.): பணத்தை பார்க்காதீர்கள். நாய் பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள்.
விஜய்கண்ணன் (சேர்மன்): அப்படியானால் நீங்கள் தொகை ஸ்பான்சர் செய்யுங்கள். நமக்கு நாமே திட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் போட்டால், அரசு மூன்று மடங்கு போட்டு அத்தியாவசிய பணிகள் செய்து தர அரசு முன் வந்துள்ளது. கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் ஸ்பான்சர் பிடித்து தர உதவி செய்யுங்கள்.
கவுன்சிலர்கள் கதிரவன், பரிமளா, மகேஸ்வரி, கிருஷ்ணவேணி, புஷ்பா, தர்மராஜன், தீபா, சுமதி, செல்வி, கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் வடிகால், வாட்டர் டேங்க், முள்செடிகள் அகற்றுதல், சாலை வசதி உள்ளிட்ட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்கள் பணியை ரத்து செய்யக் கோரி அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். கமிஷனர் விஜயகுமார், பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.