வழக்கறிஞர் 50 ஆண்டு பணி நிறைவு விழா முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பங்கேற்பு
வழக்கறிஞர் 50 ஆண்டு பணி நிறைவு விழாவில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே. சதாசிவம் பங்கேற்று வாழ்த்தினார்
குமாரபாளையம் வழக்கறிஞர் தட்சிணாமூர்த்தியின் 50 ஆண்டு பணி நிறைவு விழா வட்டமலை எஸ்.எஸ்.எம். மகாலில் நடைபெற்றது.
இதில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும், கேரளா முன்னாள் ஆளுநருமான சதாசிவம் பங்கேற்று வாழ்த்தி பேசியதாவது: வழக்கு விசாரணைகளில் அதிக வாய்தாக்கள் தராமல் விரைந்து வழக்குகளை முடிக்க முயற்சிக்க வேண்டும். பம்பாய் குண்டு வெடிப்பு வழக்கில் நானும், இன்னொரு நீதிபதியும் வேறு வழக்குகள் எதையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் 10 மாதங்கள் வழக்கை நடத்தி ஆயிரத்து 260 பக்க தீர்ப்பு வழங்கினோம் என்றார் அவர்.
குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி தாளாளர் மதிவாணன் பேசியதாவது:வழக்கறிஞர் பணி என்பது என்ன, என்பது குறித்து திருவள்ளுவர் தான் இயற்றிய திருக்குறள் மூலம் உலகுக்கு அப்போதே உணர்த்தி உள்ளார். டாக்டர்களை இறைவனுக்கு நிகராக கூறுவார்கள். வழக்கறிஞர், நீதிபதி ஆகியோரும் இறைவன் பணியை தான் செய்து வருகிறார்கள் என்றார் அவர்.
எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் இளங்கோ பேசியதாவது:எங்கள் வீட்டில் உள்ள சமையல்காரர் உடல் நலமில்லாமல் இருந்தார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறினார்கள். சிறுநீரகம் தானம் கொடுப்பவர்கள் சம்மதத்துடன், நீதிபதியின் ஒப்புதல் கடிதமும் தேவை என்று கூறிவிட்டார்கள். நீதிபதிக்கு கடிதம் எழுதி, மனு பதிவு செய்து, வாய்தா, வாய்தா என்று பல மாதங்கள் ஆகும். ஆனால் என் நண்பர் ஒரு யோசனை கூறினார். அவரது நண்பரான நீதிபதி ஒருவருக்கு கடிதம் எழுதச் சொன்னார். போன் மூலம் கடிதம் அனுப்பும் தகவல் சொல்லி, கடிதம் அனுப்பி வைப்பதாக கூறினார். ஆளை அனுப்பி வையுங்கள், பார்த்து கொள்கிறேன் என்று நீதிபதி. கூறினார். ஒரே நாளில் அந்தக் கடிதம் கிடைத்து, அதனை மருத்துவமனையில் சமர்ப்பித்து அறுவை சிகிச்சை நடந்தது. அந்த நீதிபதி மட்டும் தாமதம் செய்து இருந்தால், அந்த தொழிலாளி உயிர் வாழ்ந்து இருக்க மாட்டார். நீதித் துறையில் பணியாற்றும் ஒவ்வொருவரும் இறைவன் தான் என்பதை அப்போது உணர்ந்து கொண்டேன் என்றார் அவர்.
இதில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி வாசுகி, மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன், மாவட்ட கூடுதல் நீதிபதி சுந்தரய்யா, மாவட்ட குற்றவியல் நீதிபதி வடிவேல், திருச்செங்கோடு குற்றவியல் நீதிபதி சுரேஷ், திருச்செங்கோடு விரைவு நீதிமன்ற நீதிபதி கைலாஷ், மூத்த வழக்கறிஞர் துரைசாமி, குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் மாலதி, மூத்த வழக்கறிஞர் துரைசாமி, குமாரபாளையம் வழக்கறிஞர் சங்க தலைவர் சரவணராஜன், எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி தாளாளர் மதிவாணன், எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் இளங்கோ, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.