குமாரபாளையம்: சாலை பழுதால் லாரி - தனியார் சொகுசு பஸ் மோதி விபத்து
குமாரபாளையத்தில், சாலை பழுதால் லாரி, தனியார் சொகுசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது.
குமாரபாளையம் அருகே, சேலம் - கோவை புறவழிச்சாலை உள்ளது. பவானி செல்லும் வாகனங்கள் அனைத்தும், கவுரி தியேட்டர் பின்புறம் டீச்சர்ஸ் காலனி எதிரில், சர்வீஸ் சாலையில் இருந்து புறவழிச்சாலைக்கு போய் செல்ல வேண்டும். இந்த இணைப்பு சாலை பகுதி, மண் சாலையாக இருப்பதால், தொடர் மழையால் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளமாக உள்ளது.
இதனால், இந்த பகுதியில் புறவழிச்சாலைக்கு திரும்பும் அனைத்து வாகனங்களும் சிரமப்பட்டு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இரவு குமாரபாளையத்தில் இருந்து, பவானி செல்வதற்காக, இந்த இடத்தில் டேங்கர் லாரி ஒன்று திரும்பியது. சாலை பழுதால், லாரி சாலையின் மேலே ஏற திணறியது. அப்போது, பெங்களூரில் இருந்து கேரளா மாநிலம் கோட்டயம் நோக்கி தனியார் சொகுசு ஒன்று வேகமாக வந்தது.
லாரி திணறியதை கண்ட சொகுசு பஸ் ஓட்டுனர், பயணிகளின் உயிரை காக்க சர்வீஸ் சாலையில் பஸ்ஸை திருப்பினார். அப்போது லாரியின் பக்கவாட்டில் மோதி பஸ் கன்னாடி உடைந்தது. லாரியின் பின்பக்கம் லேசான சேதம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் பிழைத்தனர். ஒரு நொடியில் பஸ் ஓட்டுனர் சாமர்த்தியத்தால் பெரிய விபத்து தடுக்கப்பட்டது. சாலை பழுதால் ஏற்பட்ட இந்த விபத்து கடைசி விபத்தாக இருக்கட்டும். இனியாவது இந்த இடத்தில் கான்கிரீட் இணைப்பு சாலை அமைத்து விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.