பள்ளிபாளையம் அருகே சாலையை கடக்கும் போது வாகனம் மோதி சிறுவன் உயிரிழப்பு
பள்ளிபாளையம் அருகே சாலையை கடக்க முயன்ற 8 வயது சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தான்.;
பள்ளிபாளையம் அருகே நடந்த விபத்தில் உயிரிழந்த சிறுவன் லாலன்சா.
பள்ளிபாளையம் அருகே சாலையை கடக்க முயன்ற 8 வயது சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தான்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் மெகபூத் பாஷா. ஐஸ் வியாபாரி. இவருடைய மகன் லாலன்சா (8). அக்ரஹாரம் பகுதியில் அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான். டிசம்பர் 9-ஆம் தேதி அக்ரஹாரம் பகுதியில் உள்ள தனது பெரியப்பா வீட்டிற்கு செல்வதற்காக, சிறுவன் சாலையை கடக்க முயன்றுள்ளான். அப்பொழுது எதிரே வந்த இருசக்கர வாகனம் ஒன்று சிறுவன் மீது மோதியதில், சிறுவன் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளான்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சிறுவனை ஆசுவாசப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு சென்ற சிறுவன் விபத்து நடைபெற்றதை கூறினால், பெற்றோர்கள் அடிப்பார்களோ, திட்டுவார்களோ என அஞ்சி விபத்து குறித்து வீட்டில் சொல்லாமல் எப்போதும் போல இருந்துள்ளான். இந்நிலையில் பத்தாம் தேதி காலை சிறுவன் உடல் சோர்வாக இருப்பதை கண்டறிந்த பெற்றோர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பரிந்துரைத்தனர்.
இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் சிறுவன் லாலன்சா பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் சிறுவனின் தந்தை மெகபூத் பாசா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்து பள்ளிபாளையம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.