குமாரபாளையம் பகுதியில் சுற்றித் திரிந்த முதியவர்! ஆதரவற்றோர் மையத்தில் சேர்க்கப்பட்டார்!!

குமாரபாளையத்தில் ஆதரவற்ற நிலையில் இருந்த முதியவர் ஆதரவற்றோர் மையத்தில் சேர்க்கப்பட்டார்.

Update: 2022-12-22 17:45 GMT

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் முதியவர் ஆதரவற்றோர் மையத்தில் சேர்க்கப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஆனங்கூர் சாலையில் முதியவர் ஒருவர் ஆதரவில்லாமல் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். இதைத்தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் சித்ரா, உஷா, சமூக சேவகி கவுசல்யா ஆகியோர் ஆறுதலாக பேசினர்.

விசாரணையில், அவரது பெயர் சுப்பிரமணி (வயது 58) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, முதியவர் சுப்பிரமணியை எதிர்மேடு அன்னை ஆதரவற்றோர் மைய நிர்வாகி ஹேமமாலினியிடம் அவர்கள் ஒப்படைத்தனர். தற்போது முதியவர் சுப்பிரமணி நலமாக உள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் சித்ரா, உஷா ஆகியோர் கூறியதாவது:

குமாரபாளையம் எதிர்மேடு பகுதியில் செயல்படும் அன்னை ஆதரவற்றோர் மைய நிர்வாகி ஹேமமாலினி குறித்தும், ஆதரவற்றோர் மையம் குறித்தும் தெரிந்து வைத்திருந்தோம். முதியவர் சுப்பிரமணி ஆதரவற்ற நிலையில் இருந்ததால் அவரிடம் பேசி உணவு வாங்கி கொடுத்தோம்.

அதன் பிறகு, அவரது ஒப்புதலோடு அன்னை ஆதரவற்றோர் மையத்தில் ஒப்படைத்துள்ளோம். முதியவர் சுப்பிரமணி தற்போது நலமுடன் உள்ளார். அங்குள்ள சக முதியவர்களுடன் அவர் சகஜமாக பேசி வருகிறார். எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒரு சமூக சேவையாக இந்த உதவியை செய்தோம் என சித்ரா மற்றும் உஷா ஆகியோர் தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதுபோன்று ஆதரவற்ற நிலையில் பல முதியவர்கள் சுற்றித் திரிந்து வருகின்றனர். அவர்களிடம் உரிய விசாரணை மேற்கொண்டு முதியோர் இல்லங்களில் ஒப்படைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News