பள்ளிபாளையம் கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் 7 பேர் கைது

பள்ளிபாளையம் கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-11-12 01:06 GMT

பள்ளிபாளையம் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர்.

பள்ளிபாளையம் அருகே வெடியரசம்பாளையம் பகுதில் ஸ்ரீ விநாயக வீவர்ஸ் ஜவுளி அதிபர் ஜெயபிரகாஷ் வீடு உள்ளது. ஜெயபிரகாசின் தந்தை மணி, 70, தாய் பழனியம்மாள், 65. வீட்டில் இருந்தனர். இந்த நிலையில் மதியம் 2 மணியளவில் சுமார் 10 பேர் கும்பலாக வந்து கதவை தட்டியுள்ளனர். வயதான மணி, கதவை திறந்து யார்? என கேட்டுள்ளார். உங்கள் மகன் ஜெயபிரகாசை பார்க்க வந்துள்ளோம் என கூறியுள்ளனர். உடனே மணியை  கீழே தள்ளி கை, கால்களை கட்டிப்போட்டு பணத்தை கேட்டு கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.  பீரோவில் உள்ளதாக அவர் கை காட்டியுள்ளார்.

பின்னர் பீரோவில் இருந்த 27 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டனர். கட்டிலில் இருந்த பழனியம்மாள் சத்தம் கேட்டு வந்தபோது அவரையும் மிரட்டி, பீரோவை திறந்து தங்க செயின்கள், வளையல்கள், தோடுகள் என சுமார் 18 பவுன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு அவர் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாயையும் எடுத்துக்கொண்டு, சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோமென மிரட்டிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.

பழனியம்மாள் தனது கணவரின் கை, கால்களின் கட்டுக்களை அவிழ்த்துவிட்டு, தன்னுடைய மகன் ஜெயபிரகாசுக்கு போன் செய்து விபரத்தை கூறியுள்ளார். இதனையடுத்து பள்ளிபாளையம் போலீசுக்கு புகார் கொடுத்தார். பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. செந்தில்குமார், சண்முகபிரியா உள்ளிட்ட போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகைகள் எடுக்கப்பட்டன. திருச்செங்கோடு டி.எஸ்.பி. மகாலட்சுமி நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.

நாமக்கல் எஸ்.பி. சாய் சரண் தேஜஸ்வி உத்திரவின் பேரில் சைபர் கிரைம் கூடுதல் எஸ்.பி. சந்திரமவுலி மேற்பார்வையில், திருச்செங்கோடு டி.எஸ்.பி. மகாலட்சுமி, சமூக நீதி, மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி.பழனிசாமி வழிகாட்டுதலில், பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் வழக்கு விசாரணை செய்ய, அவருக்கு உதவியாக திருச்செங்கோடு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்.ஐ.-க்கள் சதீஷ்குமார், மதன், வெற்றிவேல், செந்தில்குமார், ஏட்டு புஸ்பராஜ் ஆகியோர் இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில் மதுரை சோழவந்தான் பெரியமருது, 25, மதுரை அரசரடி, சரவணன், 24, மதுரை பொன்னேரி, ரஞ்சித், 24, மதுரை வடிவேல் கரை, ராஜேஷ், 25, மதுரை வாடிப்பட்டி, ஜெகதீஷ், 36, நிலக்கோட்டை, சோமசுந்தரம், 42, திருச்சி, தொட்டியம், ராஜேந்திரன், 46, ஆகியோரை மல்லூர் செக் போஸ்டில், வெண்ணந்தூர் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி பிடித்து, பள்ளிபாளையம் போலீசில் ஒப்படைத்தார். பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் முதற்கட்டமாக இவர்களை கைது செய்து இவர்களிடமிருந்து ரூ.6,02,500.00 கைப்பற்றியும், இவர்கள் தப்பிக்க பயன்படுத்திய வாடகை கார் டாட்டா இண்டிகா காரையும் பறிமுதல் செய்து, குற்றவியல் நீதிமன்ற நடுவரிடம் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.

மனுதாரர் வீட்டில் பல வருடங்களாக நம்பிக்கைக்கு உரிய கார் ஓட்டுனராக இருந்து வருபவர் நாகராஜன். இவருக்கு நெருக்கமான சாமியாரை மனுதாரருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதையல் எடுத்து தருவார் என அறிமுகப்படுத்தி உள்ளார். பூஜை செலவுக்கு ரூ.50,000 வாங்கிக் கொண்டு தோட்டத்து மூலையில் பொக்லின் கொண்டு தோண்ட, அங்கு பாறைதான் வந்துள்ளது. இன்னொரு நாள் பூஜைக்கு மீண்டும் 50,000 ரூபாய் வேண்டும் என கேட்க மனுதாரர் மறுத்து விடுகிறார். தொடர்ந்து பணம் கொட்டுவது மூலமும், அந்தரத்தில் எழுமிச்சம்பழம் தோன்றுவது போலவும், வீடியோ காட்டி முயற்சித்தும் பலனில்லை. இது சாமியாருக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. கார் ஓட்டுனரிடம் உனக்கு எவ்வளவு கடன் உள்ளது? என கேட்க, 5,00,000 ரூபாய் உள்ளது என சொல்ல, உனக்கு அந்த பணத்தை நான் தருகிறேன். நீ அந்த வீட்டில் பணம் இருக்கும் இடம், அங்கு உள்ளவர்களின் நடமாட்டம் குறித்தும் சொல்ல வேண்டும் என சாமியார் சொல்ல, ஓட்டுனர் ஒத்துக்கொண்டார். ஓட்டுனர் மூலம் வீட்டில் புகுந்து பணம், நகை திருடியது விசாரனையில் தெளிவாக தெரிய வந்தது. இதன்படி 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் வெப்படை பகுதியில் பைனான்ஸ் அதிபரை கடத்தி கொலை செய்த வழக்கில் 10க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட சம்பவம் நடந்த சில நாட்களில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News