குமாரபாளையத்தில் 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு: சைல்டு ஹெல்ப் லைன் அதிரடி
குமாரபாளையத்தில் சைல்டு ஹெல்ப் லைன் மூலம் 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்டு பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.
குமாரபாளையத்தில் விதியை மீறி குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக குழந்தைகள் உதவி எண்ணுக்கு (Child Helpline) புகார் வந்தது.
இதனையடுத்து சைல்டு ஹெல்ப் லைன் அமைப்பினர், மாவட்ட கலெக்டர் உத்திரவின்படி குமாரபாளையம் வந்தனர். காஸ் வெல்டிங், டூவீலர் மெக்கானிக், மளிகை கடைகளில் அவர்கள் பணியாற்றியது தெரியவந்தது.
இதில் 18 வயதிற்குட்பட்ட 5 சிறுவர்களும் சின்னப்பநாயக்கன்பாளையம், பள்ளிபாளையம், ஈரோடு சூரம்பட்டி பகுதி அரசு உயர்நிலைப்பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் தந்தை இல்லாத தாயார் இருவருக்கு விதவை உதவித் தொகை ஆணைகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.
இந்த நிகழ்வில் நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் திருநந்தன், துணை ஆய்வாளர்கள் கோமதி, மாலா, மோகன், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் அந்தோணி, அணி உறுப்பினர் பெலிக்ஸ் அருள்ராணி உள்பட பலர் பங்கேற்றனர்.