பள்ளிபாளையம் : கிணற்றில் குளித்த 10ம் வகுப்பு மாணவன் தண்ணீரில் மூழ்கி பலி

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள தொட்டிபாளையத்தில் கிணற்றில் குளித்த மாணவன் உயிரிழப்பு.;

Update: 2021-04-15 11:11 GMT
பள்ளிபாளையம் : கிணற்றில் குளித்த 10ம் வகுப்பு மாணவன் தண்ணீரில் மூழ்கி பலி
  • whatsapp icon

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள கிழக்கு தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராசு.கூலித் தொழிலாளியான  இவருக்கு 2மகள்கள் மற்றும்  10ம் வகுப்பு படிக்கும் தரனீஷ் என்கிற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் இன்று ஊர் கிணற்றின் அருகே நண்பர்களுடன் மாணவன் தரனீஷ் விளையாடிக் கொண்டிருந்தான்.  அவன் கிணற்றில் குளிக்க ஆசைப்பட்டு நண்பர்களிடம் கூறியுள்ளான்.  நீச்சல் தெரியாததால், கயிறு கட்டி கிணற்றில் உள்ள தண்ணீரில் குளித்து கொண்டிருந்தான்.


அப்போது திடீரென கை நழுவி கயிற்றினை விட்டதால்  மாணவன் தரனீஷ் 70அடி ஆழ தண்ணீரில் விழுந்தான். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினான்.  இதை பார்த்த அவரது நண்பர்கள் கூச்சலிட்டார்கள்.  இதையடுத்து கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்செங்கோடு தீயணைப்பு  வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மாணவனை சடலமாக  மீட்டனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்கும் வகையில் ஊர் கிணற்றின் மீது தடுப்பு அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி மாணவன்  உயிரிழந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

Similar News