உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு பூஜை
குமாரபாளையத்தில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
உலக சமாதான ஆலயம் சார்பில், தமிழ் புத்தாண்டு வழிபாடு, ஆடி 18 வழிபாடு, புரட்டாசி பெருமாள் வழிபாடு, சஷ்டி வழிபாடு, கிருத்திகை, அமாவாசை, பவுர்ணமி, தீபாவளி வழிபாடு, பொங்கல் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. தற்போது உலக மக்கள் நோய்கள் இல்லாமல், ஆரோக்கியமாக வாழ்ந்திட 108 திருவிளக்கு பூஜை உலக சமாதான ஆலயத்தில் நடைபெற்றது. யோகா ஆசிரியை சாந்திஸ்ரீ வழிபாட்டினை தலைமை வகித்து நடத்தினார். பெண்கள் பெருமளவில் பங்கேற்று சரணங்களை சொல்லியவாறு வழிபாடு நடத்தினர். பொதுமக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் ஆனந்தன், கேசவராஜ், சீனிவாசன், நாகராஜ் உள்பட பலர் பூஜையில் பங்கேற்றனர்.
திருவிளக்கு பூஜையும் அதன் பலன்களும் அறிந்து கொள்வோம்:
குத்து விளக்கு என்பது சிவன், விஷ்ணு, பிரம்மா என்ற மும்மூா்த்திகளின் வடிவம். விளக்கின் அடிப்பகுதி பிரம்மா! நடுத்தண்டு விஷ்ணு, நெய் ஏந்தும் அகல் சிவன்! அதற்கு மேல் உள்ள பகுதி மகேஸ்வரன்! சிகரமாக உள்ள உச்சிப் பகுதி சதாசிவன்! விளக்கின் சுடர் லட்சுமி! ஒளி சரஸ்வதி! வெப்பம் பார்வதி ஆகும்.
விளக்கின் ஐந்து முகங்களும், சூரியன், சந்திரன், அக்கினி, சொல், உயிர் என்ற ஐந்தைக் குறிக்கும். பஞ்ச முகங்களிலும் உள்ள திரிகளைச் சுடர்விடச் செய்தால் ஆத்ம ஒளி உண்டாகும் என்பது யக்ஞ வல்கியா் கூறும் விளக்கம்.
குத்து விளக்கில் இருக்கின்ற ஐந்து முகங்களும், பெண்களுக்கு இருக்க வேண்டிய ஐந்து முக்கிய குணங்களைக் குறிக்கும் என்பது சிலர் கூறும் விளக்கம். 1. அன்பு 2. மன உறுதி 3. நிதானம் 4. சமயோசித புத்தி 5. சகிப்புத் தன்மை-பொறுமை ஆகியன.
பசு நெய் – லட்சுமி வாசம் செய்வாள், புத்திர பாக்கியம் கிட்டும். சகலவித செல்வத்தையும், வீட்டில் நலனையும் தரும்.
நல்லெண்ணெய் – சனியால் பீடிக்கப்பட்டோருக்குப் பரிகாரமாக அமையும். லட்சுமி அருள் கிட்டும். எல்லாப் பீடைகளையும் விலக்கும்.
தேங்காய் எண்ணெய் – பலவிதமான தெய்வங்கள் வீட்டில் வாசம் செய்யும். கணவன் மனைவியரிடையே பாசத்தை உண்டாக்கும். பழம்பாவங்கள் நீங்கும்.
இலுப்பை எண்ணெய் – எல்லாப் பாவங்களும் போகும். மோட்சம் கிட்டும். நல்ல ஞானம் வரும். பிறவி நீங்கும்.
விளக்கு எண்ணெய் – தெய்வ அருள், புகழ், சுகம், உற்றார் சுகம், தாம்பத்திய சுகம் இவற்றை அதிகரிக்கச் செய்யும். உடல் ஆரோக்கியம், புகழ், உறவினர் சுகம் ஆகியவற்றை விருத்தி செய்யும்.
வேப்ப எண்ணெய் – குல தெய்வத்தின் அருள் கிட்டும்.
முக்கூட்டு எண்ணெய்:- நெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய் – ஆகிய மூன்றையும் கலந்து விளக்கேற்றி வர செல்வம் உண்டாகும். ஆரோக்கியம் தரும், இறை வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது.
ஜங்கூட்டு எண்ணெய்: நெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை கலந்து ஏற்றி எவர் ஒருவர் ஒரு மண்டலம்(45 அல்லது 48) நாட்கள் பூசை செய்கிறார்களோ அவர்களுக்குத் தேவியின் அருள் உண்டாகும்.
விடியற்காலை 3.00 மணி முதல் 5.00 மணிக்குள் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் சர்வமங்கள யோகம் உண்டாகும். கிழக்குத் திசை நோக்கி விளக்கேற்றுவது சிறப்பு, துன்பங்கள் நீங்கும், கிரகங்கட்கு மகிழ்ச்சி ஏற்படும்.
மேற்குத் திசை நோக்கி விளக்கேற்றி வந்தால் கடன் தொல்லை நீங்கும். சனி கிரகத்திற்கு உவப்பு ஏற்படும், பகை நீங்கும்.
வடக்குத் திசை நோக்கி விளக்கேற்றி வந்தால் திருமணத்தடை, சுபகாரியத்தடை, கல்வித்தடை, வேலைவாய்ப்புத் தடை நீங்கும்.
தெற்குத் திசை நோக்கி எப்போதும் விளக்கேற்றக் கூடாது. அதனால் தீமைகளே ஏற்படும்.
விளக்குகளை வெறும் தரையில் வைக்கக் கூடாது. அவற்றை வெள்ளி, செம்பு, பித்தளை, பஞ்ச லோகம் முதலியவற்றாலான ஒரு தாம்பாளத்தின் மீதே வைக்க வேண்டும். அல்லது மரத்தினாலான பலகையின் மீதாவது வைத்து விளக்கு ஏற்ற வேண்டும்.
ஒருமுகம் ஏற்றி வழிபடுவது – மத்திய பலன்
இரண்டு முகம் ஏற்றி வழிபடுவது- குடும்ப ஒற்றுமை பெருகும்
மூன்று முகம் ஏற்றி வழிபடுவது -புத்திர சுகம் தரும்
நான்கு முகம் ஏற்றி வழிபடுவது – பசு, பூமி இவற்றைத் தரும்
ஜந்து முகம் ஏற்றி வழிபடுவது – செல்வத்தைப் பெருக்கும்
காலை 3.00 மணி முதல் 5.00 மணிக்குள் விளக்கேற்ற வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் சர்வ மங்களயோகத்தைத் தரும்.
மாலை 6.00 மணி அளவில் வீட்டில் விளக்கேற்றி வழிபட வேலை, நல்ல கணவன், குடும்ப சுகம், புத்திர சுகம் ஆகியவை கிட்டும்.
காலையில் விளக்கேற்றும் போது உடல், மனம் சுத்தத்துடன் வாசலில் சாணம் தெளித்துக் கோலம் போட்ட பிறகே விளக்கேற்ற வேண்டும்.
மாலையில் விளக்கேற்றும் போது, வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும்.
காலை, மாலை விளக்கேற்றும் போது கொல்லைப் புறக் கதவைச் சாத்தி விட வேண்டும்.
விளக்கேற்றும்போது, விளக்கிற்குப் பால், கல்கண்டு, நிவேதனம் வைத்து வழிபட எல்லா நன்மைகளும் கிட்டும்.
விளக்கை வாயால் ஊதியோ, வெறுங்கையாலோ அணைக்கக் கூடாது. விளக்கைக் குளிர வைக்க வேண்டுமானால் திரியில் அடிப்பகுதியை பின்புறமாக இழுக்க வேண்டும். அப்போது தீச்சுடா் சிறிது சிறிதாகக் குறைந்து திரி எண்ணெயில் அமிழ்ந்து விளக்கு குளிரும்.
எலுமிச்சம் பழத்தைச் சாறு பிழிந்துவிட்டு, அதன் தோலை விளக்குகளாக்கி அதில் நெய் விட்டு ராகு நேரத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபடுவது உண்டு. இதனால் திருமணத் தடைகள் நீங்கி, திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.