நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மோட்டார்பைக்கில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள கோட்டைமேடு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இரண்டாவது பிரிவு வாகன தணிக்கை குழுவை சேர்ந்த பறக்கும்படை அதிகாரிகள் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே மோட்டார்பைக்கில் வந்த ஒரு நபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை மேற்கொண்ட பொழுது, உரிய ஆவணங்கள் இன்றி 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் கொண்டு வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து பறக்கும்படை அதிகாரிகள் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்ததுடன் அவற்றை குமாரபாளையம் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட வட்டாட்சியர், பிடிபட்டவர் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள செளதானூர் கிராமத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பதும் இவர் தந்தை முனியப்பன் செங்கற்களை விற்பனை செய்வதால் பணத்தை கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த வட்டாட்சியர் தங்கம், உரிய ஆவணங்கள் கொடுத்து பணத்தை பெற்று செல்லுமாறு அறிவுறுத்தி ரவிக்குமாரை அனுப்பி வைத்தார். பின்னர் பறிமுதல் செய்த பணத்தை திருச்செங்கோடு கருவூலத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொண்டார்.