நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஓம்சரவணா தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
நாமக்கல் மாவட்ட பாஜக., மாவட்ட செயலாளராக பொறுப்பு வகிப்பவர் ஓம் சரவணா. இவர் குமாரபாளையம் ஜேகேகே நடராஜா கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஆவார். இவர் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்கும்படி பாஜக தலைமைக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதற்காக கடந்த ஓராண்டாக கடும் முயற்சி எடுத்து பொதுமக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களை விளக்கி கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது.
குமாரபாளையம் தொகுதியில் அமைச்சர் தங்கமணி அதிமுக சார்பில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதனால் கட்சி தலைமை மீது அதிருப்தி அடைந்த ஓம் சரவணா, அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடுவது என முடிவெடுத்தார். இதை தொடர்ந்து இன்று காலை 7 மணி முதல் குமாரபாளையத்தில் உள்ள காவேரி நகரில் வீடு வீடாக சென்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.