நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இருவேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து இருவரிடமும் இருந்து 50க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக நடைபெறும் மது,லாட்டரி,கஞ்சா விற்பனை குறித்து மாவட்ட எஸ்பி., சக்திகணேஷ் உத்தரவின் பேரில், போலீசார் சோதனை செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.இதனை தொடர்ந்து தேர்தல் நடைபெற இருப்பதால் சட்டவிரோதமாக நடைபெறும் செயல்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில் குமாரபாளையம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக தொடர்ந்து காலை முதலே மது விற்பனை நடைபெற்று வருவதாக புகார் எழுந்தது.
புகாரின் பேரில் போலீசார் வட்டமலை பகுதியில் சோதனை நடத்திய போது அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவர் தனது வீட்டில் மது பாட்டில்களை வைத்து சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்து வந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போன்று ராஜம் திரையரங்கு அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த நாகநாதன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் 50க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்து மதுவிலக்கு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.